மூளைச்சாவடைந்த இளைஞனின் உடல்பாகங்கள் உலங்குவானூர்தி மூலம் கொழும்பிற்கு கொண்டு வரப்பட்டது
விபத்தில் உயிரிழந்த இளைஞர் ஒருவரின் இதயம், சிறுநீரகங்கள் மற்றும் கல்லீரல் ஆகியவற்றை, படுமோசமான நிலையில் உள்ள நோயாளிகளுக்கு மாற்று அறுவை சிகிச்சை செய்வதற்காக, கம்பகா மாவட்ட பொது மருத்துவமனையிலிருந்து கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு உலங்கு வானூர்தி மூலம் கொண்டுவர இன்று நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
வெயங்கொடவில் வசித்து வந்த 19 வயது இளைஞர் ஒருவர் விபத்தைத் தொடர்ந்து கம்பகா மாவட்ட பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நோயாளி 24ஆம் திகதி முதல் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார் என்றும், அவர் மூளைச்சாவு அடைந்ததன் காரணமாக அவரது பெற்றோரின் ஒப்புதலுடன் உறுப்புகள் பெறப்பட்டன என்றும் மருத்துவமனை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
உலங்குவானூர்தி மூலம் கொழும்பிற்கு
அதன்படி, மூளைச்சாவு அடைந்த நோயாளியின் இதயம், கல்லீரல் மற்றும் சிறுநீரகங்களைப் பெறுவதற்கு ஒரு சிறப்பு மருத்துவக் குழு நடவடிக்கை எடுத்து, விமானப்படையின் உதவியுடன் அவற்றை கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு உலங்கு வானூர்தி மூலம் கொண்டுவந்தது என்று செய்தித் தொடர்பாளர் கூறினார்.

நோயாளியிடமிருந்து பெறப்பட்ட இதயம், கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 17 வயது இதய நோயாளிக்கு மாற்று அறுவை சிகிச்சை செய்வதற்காகத் தயார் செய்யப்பட்டுள்ளது என்று தெரியவந்துள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |