பிரான்ஸில் வெடித்த மக்கள் போராட்டம்...! ஆயிரக்கணக்கில் தொடரும் கைதுகள்
பிரான்ஸில் போராட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 1300 ஆக உயர்ந்துள்ளது.
நாடு முழுவதும் அரசாங்கத்திற்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் தொடர் மக்கள் போராட்டங்கள் மற்றும் வன்முறை சம்பவங்களைத் தொடர்ந்து இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
வாழ்க்கைச் செலவு உயர்வு, கல்வி நிதியொதுக்கீட்டுக் குறைப்பு மற்றும் நாட்டின் நிதிச் சீர்திருத்தங்களுக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆயிரக்கணக்கான மக்கள் மற்றும் இளைஞர்கள், முக்கிய நகரங்களில் காவல்துறையினருடன் மோதலில் ஈடுபட்டு வருகின்றனர்.
வணிக வளாகங்கள்
இந்தநிலையில் பேரணிகளின் போது சட்டம் ஒழுங்கை மீறியமை, பொதுச் சொத்துக்களுக்குச் சேதம் விளைவித்தமை மற்றும் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டமைக்காக இதுவரை 1300 இற்கும் அதிகமானோர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் 900 இற்கும் மேற்பட்டோர் மீது வழக்கு விசாரணை நிலுவையில் உள்ளதாகவும் அவர்களை விரைவாக நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நீதி அமைச்சு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாரிஸின் முக்கிய வீதிகள் மற்றும் வணிக வளாகங்கள் பேரணிகளால் முற்றுகையிடப்பட்டுள்ளதுடன் லியோன் மற்றும் மார்சேய் போன்ற நகரங்களிலும் தீ வைப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
காவல்துறை படைகள்
பாரிஸின் சில குறிப்பிட்ட பகுதிகளில் (République மற்றும் Les Halles) இரவு நேரப் போக்குவரத்து மற்றும் மக்கள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த காவல்துறையினர் கூடுதல் கட்டுப்பாடுகளை விடுத்துள்ளனர்.

பிரான்ஸின் இந்த பாரிய மக்கள் போராட்டம் மற்றும் வன்முறைச் சூழல், ஜனாதிபதி இமானுவேல் மாக்ரோனின் நிர்வாகத்திற்குப் பெரும் சவாலாக மாறியுள்ளது.
இந்தநிலையில் நாடு முழுவதும் பாதுகாப்பைப் பலப்படுத்த மேலதிக ஆயுதமேந்திய காவல்துறை படைகள் குவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |