8 நாடுகளிலிருந்து வந்த தபால் பொதிகள்: 6.75 கோடி போதைப்பொருள் பறிமுதல்
கொழும்பு மத்திய தபால் பரிவர்த்தனையில் ரூபா 67.53 மில்லியனுக்கும் (6.75 கோடி) அதிக பெறுமதியுடைய சர்வதேசப் போதைப்பொருள் பொதிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
சுங்க அதிகாரிகளால் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனையின் போது இந்த போதைப்பொருள் பொதிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
போதைப்பொருட்கள்
தாய்லாந்து, அமெரிக்கா, கனடா, பிரித்தானியா, பெல்ஜியம், பிரான்ஸ், நெதர்லாந்து மற்றும் ஜேர்மனி ஆகிய எட்டு நாடுகளிலிருந்து இலங்கையிலுள்ள முகவரிகளுக்கு அனுப்பப்பட்ட 11 சந்தேகத்திற்கிடமான சர்வதேசத் தபால் பொதிகளிலிருந்தே இப்போதைப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
அத்தோடு தாய்லாந்து, அமெரிக்கா மற்றும் பிரித்தானியாவிலிருந்து வந்த பொதிகளிலிருந்து 3.1 கிலோகிராமிற்கும் அதிகமான குஷ் ரகக் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.

இதன் சந்தைப் பெறுமதி ரூபா 30.5 மில்லியனுக்கும் அதிகம் என கணிக்கப்பட்டுள்ளது.
பெல்ஜியம், பிரான்ஸ், கனடா மற்றும் ஜேர்மனியிலிருந்து அனுப்பப்பட்ட பொதிகளிலிருந்து 2,395 கிராம் எடையுடைய எக்ஸ்டசி (MDMA) மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
அதிக பெறுமதி
இதனுடன் நெதர்லாந்திலிருந்து வந்த பொதியொன்றில் 33 கிராம் எடையுடைய மண்டி என்றழைக்கப்படும் போதைப்பொருள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
பெல்ஜியத்திலிருந்து அனுப்பப்பட்ட பொதியிலிருந்தே தனிப்பட்ட முறையில் மிக அதிக பெறுமதியுடைய அதாவது சுமார் ரூபா 33.03 மில்லியன் பெறுமதியான எம்.டி.எம்.ஏ போதைப்பொருள் இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளது.

சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவினரால் கடந்த சில மாதங்களாகக் கண்காணிக்கப்பட்டு வந்த இப் பொதிகளைப் பெறுவதற்கு குறிப்பிட்ட கால எல்லைக்குள் எவரும் வருகை தராத நிலையிலேயே, அவை காவல்துறை போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தின் (PNB) அதிகாரிகள் முன்னிலையில் திறக்கப்பட்டுச் சோதனையிடப்பட்டன.
பறிமுதல் செய்யப்பட்ட அனைத்துப் போதைப்பொருட்களும் மத்திய தபால் பரிவர்த்தனையில் மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட விசாரணைகளின் பின்னர், மேலதிக விசாரணைகளுக்காகவும் நீதிமன்ற நடவடிக்கைகளுக்காகவும் காவல்துறை போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |