சுவிட்சர்லாந்தின் கேளிக்கை விடுதியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து - உரிமையாளர் கைது
சுவிட்சர்லாந்தின் கிரான்ஸ் - மொன்டானா (Crans-Montana) பகுதியில் உள்ள 'லீ கான்ஸ்டலேஷன்' (Le Constellation) கேளிக்கை விடுதியில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட பயங்கர தீ விபத்து தொடர்பாக, அதன் உரிமையாளர்களில் ஒருவரான ஜேக் மொரெட்டி என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த புத்தாண்டு இரவு, இந்த விடுதியில் இளைஞர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் திரளாகக் கூடி கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
அதன்போது, ஷாம்பெயின் போத்தல்களில் இணைக்கப்பட்டிருந்த 'மினுமினுப்பு வானவேடிக்கை குச்சிகள்' (Sparklers), விடுதியின் மேற்கூரையில் ஒட்டப்பட்டிருந்த சத்தம் ஊடுருவாத பஞ்சு போன்ற பகுதியில் (Sound-insulating foam) பட்டதால் தீப்பரவல் ஏற்பட்டது.
கவனக்குறைவாக மரணத்தை விளைவித்தல்
இந்த கோர விபத்தில் 40 பேர் பலியானதுடன்116 பேர் காயமடைந்தனர். பலியானவர்களில் பெரும்பாலானோர் 20 வயதிற்கு உட்பட்டவர்கள்.

இந்த விடுதியின் உரிமையாளர்களான பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த தம்பதி ஜேக் மொரெட்டி மற்றும் ஜெசிகா மொரெட்டி ஆகியோர் மீது கவனக்குறைவாக மரணத்தை விளைவித்தல், தீ வைத்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஜேக் மொரெட்டி நாட்டை விட்டுத் தப்பிச் செல்ல வாய்ப்புள்ளதாகக் கருதி, அவரை சுவிஸ் காவல்துறையினர் கைது செய்து காவலில் வைத்துள்ளனர்.
ஜெசிகா மொரெட்டி இச் சம்பவத்திற்காக உருக்கமாக மன்னிப்புக் கேட்டுள்ளார்.
ஒரு நிமிடம் மெளன அஞ்சலி
வழக்கு விசாரணையின் போது, ஆண்டுதோறும் நடத்தப்பட வேண்டிய பாதுகாப்பு பரிசோதனை (Safety Checks) அந்த விடுதியில் கடந்த 5 ஆண்டுகளாக நடத்தப்படவில்லை என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

இதேவேளை இந்தத் துயரச் சம்பவத்தைக் நினைவுகூரும் வகையில், சுவிட்சர்லாந்து முழுவதும் இன்று ஒரு நிமிடம் மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது.
அத்துடன் ஐந்து நிமிடங்களுக்குத் தேவாலய மணிகள் ஒலிக்கப்பட்டன. நாடு முழுவதும் ரயில்கள் மற்றும் பேருந்துகள் நிறுத்தப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது. சூரிச் விமான நிலையத்தின் செயல்பாடுகளும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டன.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |