இந்தியாவின் அதிக வரி விதிப்பே பாகிஸ்தான் வர்த்தக உறவைத் துண்டிக்க காரணம்: இஷாக் தார் சுட்டிக்காட்டு
பாகிஸ்தானிலிருந்து (Pakistan) இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு இந்தியா (India) அதிக வரி விதிப்பதால், இஸ்லாமாபாத் (Islamabad) மற்றும் டெல்லி (Delhi) இடையேயான வர்த்தக உறவு 2019 முதல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் இஷாக் தார் (Ishaq Dar) தெரிவித்துள்ளார்.
இந்தியா போன்ற அண்டை நாடுகளுடன் பாகிஸ்தான் சந்திக்கும் வர்த்தக சவால்கள் குறித்து பாகிஸ்தானின் மக்கள் கட்சியைச் சேர்ந்த வழக்கறிஞர் ஷர்மிளா ஃபாருக்கின் கேள்விக்கு பதிலளித்த போதே இஷாக் தார் இவ்வாறு குறிப்பிட்டார்.
புல்வாமா தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தானின் இறக்குமதிக்கு 200 சதவீத வரி விதிக்க இந்தியா முடிவு செய்தது மட்டுமின்றி காஷ்மீரின் பேருந்து வசதி மற்றும் வர்த்தகத்தையும் தடை செய்துள்ளது என அவர் மேலும் குறிப்பிட்டார்.
உறவு ரீதியான சிக்கல்
இந்தியாவுடனான வர்த்தக உறவைத் தொடர பாகிஸ்தானின் தொழில்துறையினர் விரும்புவதாக கடந்த மார்ச் மாதம் லண்டனில் (London) நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் இஷாக் தார் தெரிவித்திருந்தார்.
ஆனால், 2019இல் துண்டிக்கப்பட்ட வர்த்தக உறவை மீண்டும் தொடர விருப்பமில்லை என்று வெளியுறவுத் துறை அலுவலகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்திய நாடாளுமன்றம் கடந்த 2019 ஓகஸ்ட் 5 அன்று, பிரிவு 370ஐ நீக்க உத்தரவிட்டது. அப்போது, பாகிஸ்தான், இந்தியாவுடனான வர்த்தகத்தைக் குறைத்துக் கொள்ள செய்த முடிவு இரு நாடுகளுக்கான உறவு ரீதியான சிக்கலில் முடிந்தது.
ஜம்மு காஷ்மீர் பிரச்சினை
”ஜம்மு காஷ்மீர் பிரச்சினை உட்பட இந்தியாவுடனான பல பிரச்னைகளைத் தீர்ப்பதற்கு ஆக்கப்பூர்வமான முடிவுகளை எடுக்கவும், பேச்சுவார்த்தை மூலம் சரி செய்யவும் நாங்கள் தொடர்ந்து பரிந்துரைத்து வருகிறோம். அமைதி பேச்சுவார்த்தைக்கு உகந்த சூழலை உருவாக்கும் பொறுப்பு தற்போது டெல்லிக்கு உள்ளது.” என இஷாக் தார் கூறினார்.
மற்ற அண்டை நாடுகளைப் போல் பாகிஸ்தானுடனும் இயல்பான உறவைப் பேண இந்தியா விரும்புகிறது. ஆனால், பயங்கரவாதம் மற்றும் வெறுப்பு இல்லாத அத்தகைய சூழலை உருவாக்கும் பொறுப்பு பாகிஸ்தானுக்கு இருப்பதாக இந்தியா தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்தியா, பாகிஸ்தானுக்கு இடையே காஷ்மீர் விவகாரம், எல்லை தாண்டிய பயங்கரவாதம் காரணமாக நீண்டகாலமாக இறுக்கமான சூழல் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |