ஈரானில் பதற்றம்! ஒரேநாளில் படுகொலை செய்யப்பட்ட ஒன்பது பாகிஸ்தானியர்கள்
ஈரானின் சிஸ்டான் - பலூசிஸ்தான் மாகாணத்தில் 9 பாகிஸ்தானியர்களை அடையாளம் தெரியாத ஆயுதமேந்திய நபர்கள் சுட்டு கொன்றுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அண்மையில் பாகிஸ்தானை அடிப்படையாக கொண்ட சன்னி பிரிவை சேர்ந்த ஜெய்ஷ் அல்-அடில் என்ற பயங்கரவாத அமைப்பை இலக்காக கொண்டு ஈரான், ரொக்கெட் மற்றும் ஆளில்லா விமானங்களை கொண்டு தாக்குதல் நடத்தியது.
பாகிஸ்தானின் மேற்கு பகுதியான பலூசிஸ்தானில் நடந்த இந்த தாக்குதலில் 2 குழந்தைகள் உயிரிழந்ததோடு 3 பேர் படுகாயமடைந்தனர்.
கொடூர கொலை
இந்த சூழலில், ஈரானுக்கு எதிராக பாகிஸ்தான் கடந்த சில நாட்களுக்கு முன் தாக்குதலில் ஈடுபட்டது. சப்பார் பகுதியை நோக்கி நடந்த இந்த அதிரடி தாக்குதலில் 4 குழந்தைகள் உள்பட 7 பேர் பலியானார்கள்.
ஈரானை ஒரு சகோதர நாடு என்று பாகிஸ்தான் கூறி வந்த நிலையில், அந்நாடுகளுக்கு இடையே நடந்த இந்த தாக்குதல் உலக நாடுகள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் , ஈரானில் 9 பாகிஸ்தானியர்களின் கொடூர கொலை ஆழ்ந்த அதிர்ச்சியளிக்கிறது என்று ஈரானுக்கான பாகிஸ்தான் தூதர் முகமது முதசீர் திப்பு எக்ஸ் பதிவை வெளியிட்டுள்ளார்.
பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு முழு ஆதரவை தூதரகம் வழங்கும். இந்த விவகாரத்தில் முழு ஒத்துழைப்பை வழங்கும்படி ஈரானிடம் கேட்டிருக்கிறோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |