பாகிஸ்தான் கொடூர கொலை -கைதானவர்கள் தொடர்பில் அந்நாட்டு சட்டத்தரணிகள் எடுத்துள்ள முக்கிய முடிவு
பாகிஸ்தான் - சியல்கோட் பகுதியில் பிரியந்த குமார கொடூரமாக கொலை செய்யப்பட்ட நிலையில் இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைதானவர்களுக்கு எதிராக நீதிமன்றில் ஆஜராகப்போவதில்லையென சியல்கோட் மாவட்ட சட்டத்தரணிகள் சங்கம் தீர்மானித்துள்ளது.
நேற்றைய தினம் இடம்பெற்ற சட்டத்தரணிகள் சங்க கூட்டத்தில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அத்துடன், இந்த கொடூர சம்பவம் தொடர்பில் அச்சங்கம் வருத்தம் தெரிவித்துள்ளது.
இதனிடையே, பிரியந்தகுமார பணியாற்றிய ராஜ்கோ இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தைச் சேர்ந்த 345 ஊழியர்கள் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.
பிரியந்த குமார கொலை தொடர்பில் நேற்றையதினம் மேலும் 8 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.
இச்சந்தேக நபர்கள் குஜ்ரன்வாலா பயங்கரவாத தடுப்பு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதையடுத்து, அவர்களை 13 நாட்கள் காவல்துறையின் கீழ் தடுப்பு காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.