பிரியந்த குமார படுகொலை எதிரொலி -சியால்கோட்டில் ஏற்றுமதி தொழில்துறை சீர்குலைவு
பாகிஸ்தானின்சியல்கோட்டில் பிரியந்த குமார தியவதனகே (Priyantha Kumara Diyawadanage)கொடூரமான முறையில் தாக்கப்பட்டு கொல்லப்பட்டதை அடுத்து, பாகிஸ்தானின் தொழிற்சாலை நடவடிக்கைகள் சீர்குலைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த சம்பவம் வெளிநாடுகளுடனான வர்த்தக உறவில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
வெளிநாட்டு கணக்காய்வாளர்கள் மற்றும் பிற வெளிநாட்டு பணியாளர்கள் பாகிஸ்தானுக்கு வருவது ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நிஜாம் சன்ஸ் பிரைவேட் லிமிடெட்டின் தலைமை நிர்வாக அதிகாரி அலி அன்வர் இது தொடர்பாக தெரிவிக்கையில், பிரியந்த குமாரவின் கொலையை கருத்திற் கொண்டு சம்பந்தப்பட்ட கணக்காய்வாளர்கள் பாகிஸ்தானுக்கு வர மறுத்ததாக அவர் கூறினார்.
இந்நிலையால் சியல்கோட்டில் ஏற்றுமதி தொழில் பின்னடைவை சந்தித்துள்ளதாக சியல்கோட் வர்த்தக சபை தெரிவித்துள்ளது. பாகிஸ்தானின் தேசிய ஏற்றுமதி வருவாயில் சியல்கோட் ஏற்றுமதி தொழில் 2.2 பில்லியன் ரூபாயை வழங்குகிறது.
எனினும், இது தற்காலிகமான நிலை என்றும், விரைவில் இயல்பு நிலைக்குத் திரும்பும் என்றும் சியல்கோட் வர்த்தக சபையின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறைத் தலைவர் சல்மான் மிர் தெரிவித்துள்ளார்.