மக்களுக்கு அடுத்த பேரிடி -மீண்டும் அதிகரிக்கவுள்ள பால்மா விலை
பால்மாவை ஏற்றிவந்த கப்பல் கொள்கலன்களை விடுவிக்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதி நிர்வாக திணைக்களத்தின் அனுமதி மறுக்கப்பட்டதன் காரணமாக மீண்டும் பால்மாவின் விலைகளை அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பாக பால்மா இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் கலாநிதி லக்ஷ்மன் விஜேசூரிய,இன்று (15) கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் தெரிவிக்கையில்,
தேங்கி கிடக்கும் கொள்கலன்கள்
4 இலட்சம் கிலோ கிராம் பால்மா அடங்கிய 17 கொள்கலன்கள் கடந்த 25 நாட்களாக கொழும்பு துறைமுகத்தில் தேங்கிக் கிடக்கின்றன. ஆவணங்கள் மற்றும் கடன் பத்திரங்கள் தாமதமானதால் 15 கொள்கலன்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
கொள்கலன்களை விடுவிக்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதி நிர்வாக திணைக்களத்தின் அனுமதி மறுக்கப்பட்டதன் காரணமாகவே அவை தேங்கியுள்ளதாகவும் அவற்றுக்கு தாமதக் கட்டணமாக 40 இலட்சம் செலுத்த வேண்டியுள்ளதால் பால்மாவின் விலையை அதிகரிக்ககூடும் என்றும் குறிப்பிட்டார்.
நேரத்திற்கு நேரம் மாறுபடும் சட்டங்கள்
கப்பலில் பால்மாவை ஏற்றும் போது ஒரு சட்டமும், நடுக்கடலில் பயணிக்கும் போது மற்றொரு சட்டமும், கொழும்பு துறைமுகத்தை கப்பல் நெருங்கியதும் மற்றுமொரு சட்டமும் நடைமுறைப்படுத்தப்படுவதனால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
கொள்கலன்களை விடுவிப்பதற்கு அமைச்சு அனுமதி வழங்கியுள்ள போதிலும், இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டாளர், பால்மா கொள்கலன்களை விடுவிக்க மறுப்பதாகவும் தெரிவித்தார்.
கட்டுப்பாட்டாளரின் விளக்கம்
இதுதொடர்பில் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டாளர் உப்புல்மலி பிரேமதிலக்க தெரிவிக்கையில், திணைக்களத்தில் வினைத்திறனற்ற நிலைமை இல்லை எனவும் கட்டுப்பாட்டாளர் என்ற வகையில் தாம் எவ்வித ஆவணங்களையும் மறைக்கவில்லை என்றார்.
மேலும், பால்மா பிரச்சினை குறித்து சரியாகத் தெரியவில்லை எனவும் பொதுச் சட்டத்துக்கு மாறாக இறக்குமதி செய்யப்பட்டால் அதனை எக்காரணம் கொண்டும் விடுவிக்க மாட்டோம் என்று தெரிவித்தார்.