பனாமாவில் வறட்சி : சர்வதேச வர்த்தகமே முடங்கும் அபாயம்!
பனாமா கால்வாயில் ஏற்பட்டுள்ள வறட்சியின் காரணமாக கப்பல்களை இயக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால் ஒரு மாதத்துக்கும் மேலாக சரக்குகளுடன் கப்பல்கள் நடுக்கடலில் காத்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
சர்வதேச கடல்வழிப் போக்குவரத்தின் தன்மையை மாற்றியமைத்து எளிமையாக்கிய இரண்டு திட்டங்களாக சூயஸ் கால்வாயும் மற்றும் பனாமா கால்வாயும் திகழ்கிறது.
அத்திலாந்திக் சமுத்திரத்தினையும், பசுபிக் சமுத்திரத்தினையும் இணைத்து தென் அமெரிக்காவை சுற்றிச் செல்லும் பயண நேரத்தைக் குறைப்பதற்காக பனாமா நாட்டிலுள்ள காடன் ஏரியில் செயற்கையாக உருவாக்கப்பட்ட கால்வாயே பனாமா கால்வாய் ஆகும்.
நீர்ப்பூட்டு சாதனம்
கடல் மட்டத்திலிருந்து 85 அடி உயரத்தில் உள்ள இந்த கால்வாயின் ஊடாக கப்பல் செல்ல வேண்டுமாக இருந்தால் அது கடல் மட்டத்திலிருந்து 85 அடிக்கு நீர்ப்பூட்டு சாதனம் ஒன்றின் மூலம் உயர்த்தப்படுகிறது.
பின்னர் ஏரியிலிருந்து வரும் நீரின் மூலம் இந்த நீர்ப்பூட்டு இயங்கி, கப்பல்களை உயர்த்தி காடன் ஏரியைக் கடந்த பிறகு கடலில் சமநிலையில் இறக்கிவிடும், இந்த பயணத்தின் போது இந்த கால்வாயில் 5 சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டு கப்பலின் வகை, சரக்கின் வகை, சரக்கின் எடையைப் பொருத்துக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
இதுவே பனாமா நாட்டின் பொருளாதாரத்தில் முக்கியடித்துவம் வாய்ந்த வருமானமாக திகழ்கிறது.
மேலும், இந்தக் கால்வாயின் வழியாக நாளொன்றுக்கு 38 கப்பல்களும், ஆண்டுக்கு 14,000 சரக்குக் கப்பல்களும் செல்கிறது.
உலகப்பொருளாதாரத்தின் முக்கியப்புள்ளியாக விளங்கும் இந்த பனாமா கால்வாயில் தற்போது புதிய பிரச்சினை உருவாகியுள்ளது இதனால் சர்வதேச பொருளாதாரமே பாதிக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த ஆண்டு (2023) பனாமா நாட்டில் மழைவீழ்ச்சி 30 சதவீதம் குறைவாக கிடைத்துள்ளது, இதனால் அந்தப்பகுதியில் வறட்சி ஏற்பட்டுள்ளது, இதனால் பனாமா கால்வாயில் நீரின் அளவும் குறைந்துள்ளது.
சர்வதேச நீர்வழி வர்த்தகம்
இதன் காரணமாக கப்பல்களைக் கடல் மட்டத்திலிருந்து உயர்த்துவதில் சிரமமுள்ளதால், கப்பல் போக்குவரத்தின் அளவைக் குறைக்க வேண்டிய நிலைக்கு கால்வாய் நிர்வாகத்தினர் தள்ளப்பட்டுள்ளனர்.
கடந்த ஜூலை மாதம் வரை நாளொன்றுக்கு 38 கப்பல்கள் வரை பனாமா கால்வாய் வழியில் சென்ற நிலையில், தற்போது இந்த எண்ணிக்கை வெறும் 3 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.
இதனால் ஏற்பட்டுள்ள பிரச்சனைகளை சரி செய்வதற்காகாக பனாமா நாட்டுத் தலைவர்களினால் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, 2024 பெப்ரவரி முதல் நாளொன்றுக்கு 18 கப்பல்களை கால்வாயினூடாக செல்ல அனுமதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இது சர்வதேச நீர்வழி வர்த்தகத்தினை பாதிக்கும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர், பனாமா கால்வாயினை கடக்க வரிசையில் காத்திருக்கும் கப்பல்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிப்பது பல்வேறு பிரச்சினைகளுக்கு வலி வகுக்கும் எனவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
ஏற்கெனவே, கடந்த ஒகஸ்ட் மாதம் முதல் 200-க்கும் மேற்பட்ட கப்பல், கால்வாயை கடப்பதற்காக வரிசையில் நின்று கொண்டிருப்பதால் சரக்குப் போக்குவரத்தில் பெரும் தொய்வு ஏற்பட்டுள்ளது.
இதனால் முன்னணி கப்பல் நிறுவனம் ஒன்று சுமார் 4 லட்சம் அமெரிக்க டொலர்கள் அதிகமாகக் கொடுத்து வரிசையைத் தவிர்த்து கடந்து செல்ல பேரம் பேசியுள்ளதாகவும், மேலும், பல கப்பல்கள் சுற்றுப் பாதையில் பயணம் மேற்கொள்ள முடிவெடுத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
சர்வதேச அளவில் 5 சதவீத வர்த்தகத்தைக் கையாளும் பனாமா கால்வாய் முடங்கியிருப்பதால், உலகளாவிய விநியோகச் சங்கிலி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இதன் விளைவாக சர்வதேச அளவில் உணவு, எரிவாயு, சமையல் எண்ணெய் மற்றும் பிற பொருள்களின் விலைகள் உயரும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.
இதனால் சர்வதேச கடல்வழிப் போக்குவரத்தை வலுப்படுத்த மாற்று வழித்தடங்களை உருவாக்குவது அவசியம் என்று பல்வேறு தரப்பிலிருந்தும் கோரிக்கைகள் விடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.