பண்டோரா ஆவண சர்ச்சை - நடேசன் விசாரணைக்கு அழைப்பு
சர்ச்சைக்குரிய பண்டோரா ஆவணம் தொடர்பில் வாக்குமூலம் பெறுவதற்காக ஸ்ரீலங்காவின் முன்னாள் அமைச்சர் நிருபமா ராஜபக்ஷவின் கணவர் திருக்குமார் நடேசன், இலஞ்ச ஊழல் தடுப்பு ஆணைக்குழுவினால் விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளார்.
இதற்கமைய நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வரும்படி குறித்த ஆணைக்குழுவினால் தொழிலதிபர் திருக்குமார் நடேசனுக்கு இன்றைய தினம் கடிதம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் சகோதரிகளில் ஒருவரான முன்னாள் அமைச்சர் நிருபமா ராஜபக்ஷவின் கணவரான பிரபல தொழிலதிபர் திருக்குமார் நடேசன் இரகசிய சொத்துக்களை வைத்திருப்பதாக அண்மையில் உலகளாவிய ரீதியில் கசிந்த பண்டோரா ஆவணத்தில் தெரிவிக்கப்பட்டிருந்து.
பண்டோரா ஆவணம் மூலம் இலங்கை பற்றி கசிந்த தகவல் குறித்து உடனடியாக விசாரணை நடத்துமாறு ஸ்ரீலங்கா ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இன்றைய தினம் உத்தரவை வழங்கியிருந்தார். அதேபோல தென்னிலங்கையைச் சேர்ந்த சட்டத்தரணிகள் குழுவொன்று இதுபற்றிய விசாரணைகளை நடத்துமாறு கோரி முறைப்பாடு ஒன்றையும் இன்று பகல் செய்திருந்தது.
இதனையடுத்தே திருக்குமார் நடேசனை ஆணைக்குழுவுக்கு வரவழைக்க இன்று மாலை முடிவு எடுக்கப்பட்டதாக ஆணைக்குழுவின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
பண்டோரா ஆவணத்தில் தனது மற்றும் மனைவியின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும், இது குறித்து ஆராய ஒரு சுயாதீன ஆய்வாளரை நியமிக்க வேண்டும் என்றும் திருக்குமார் நடேசன், ஸ்ரீலங்கா ஜனாதிபதிக்கு இன்று கடிதம் ஒன்றையும் அனுப்பியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.