மாணவர்களின் பெற்றோரை இலக்கு வைத்து பாரிய நிதி மோசடி : காவல்துறை எச்சரிக்கை
இலங்கையின் பல பகுதிகளில் இருந்து பாடசாலை மாணவர்களின் பெற்றோரை இலக்கு வைத்து நிதி மோசடி ஒன்று இடம்பெறுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பல சம்பவங்கள் தொடர்பாக முறைப்பாடுகள் கிடைத்ததைத் தொடர்ந்து, காவல்துறை இந்த மோசடி தொடர்பாக விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
உடனடியாக பணத்தை வைப்புச் செய்ய வேண்டும்
பாடசாலை அதிகாரிகள் போல் காட்டிக் கொள்ளும் கும்பல், மாணவர்கள் கடுமையாக நோய்வாய்ப்பட்டிருப்பதாகவும், சிகிச்சை தேவைப்படுவதாகவும் கூறி, உடனடியாக பணத்தை வைப்புச் செய்ய வேண்டும் என்று பெற்றோரை தொடர்பு கொண்டு தெரிவித்து வருவதாக கூறப்படுகிறது.
கொழும்பில் உள்ள பிரபல பாடசாலையொன்றின் பிள்ளையின் தந்தைக்கு இதே போன்ற அழைப்பு வந்திருந்த நிலையில்,தந்தை சட்டத்தரணி என்ற வகையில் அவர் பாடசாலை அதிகாரிகளுடன் தொடர்பு கொண்ட பின்னர் அது மோசடியானது என தெரியவந்துள்ளது.
வங்கி அதிகாரிக்கும் வந்த தகவல்
குருநாகலில் உள்ள வங்கி ஒன்றில் பணிபுரியும் நபர் ஒருவருக்கும் இதே போன்ற தொலைபேசி அழைப்பு வந்தநிலையில் அவர் மருத்துவமனைக்கு விரைந்தார், ஆனால் அவரது சக ஊழியர் பாடசாலை அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு மோசடியை அடையாளம் கண்டதை அடுத்து பணம் வைப்பிலிடுவது தடுக்கப்பட்டது.
குருநாகலிலுள்ள மற்றுமொரு முன்னணி ஆண்கள் பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர் ஒருவரின் தந்தைக்கும் இதே போன்ற அழைப்பு வந்திருந்த போதிலும், மாணவனின் தாத்தாவை பாடசாலைக்கு அனுப்பி வைத்த நிலையில் அதிகாரிகள், குழந்தை நலமுடன் இருப்பதாகவும் வகுப்பில் இருப்பதாகவும் உறுதியளித்தநிலையில் மோசடி வெளிச்சத்திற்கு வந்தது.
மோசடிக்கு இரையான பெற்றோர்
சில பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் பாதுகாப்பை சரிபார்க்கத் தவறியதால் மோசடி செய்பவர்களிடம் பணத்தை வைப்பு செய்துள்ளதாக விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.
இதற்கிடையில், ஏமாற்றுக்காரர்களால் ஏமாற்றப்பட்டு மருத்துவமனைகளுக்கு விரைந்த பெற்றோரின் வீடுகளை மோசடி செய்தவர்கள் உடைத்து கொள்ளையடித்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதுபோன்ற மோசடிகளுக்கு பொதுமக்கள் பலியாகாமல் இருக்குமாறும், பொய்யான தகவல்களின் மீது நடவடிக்கை எடுப்பதற்கு முன்பு விவரங்களை சரிபார்த்துக்கொள்ளுமாறும் காவல்துறை பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.