நாடாளுமன்றத்தினை கலைத்து புதிய தேர்தல் நடத்த வேண்டும் - யாழ் முதல்வர் வலியுறுத்து
அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் பதவி விலகி புதிய மக்கள் ஆணையைக் கோருவதே தற்போதைய காலத்தின் தேவை என யாழ். மாநகர சபை முதல்வர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.
யாழில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் மேற்கண்டவாறு கூறினார். மேலும் கருத்து வெளியிட்ட அவர்,
மக்களின் ஆணை
தற்போதைய அரசாங்கம் மக்களின் ஆணையினை இழந்து விட்டது. தற்போது நாடு பொதுத் தேர்தல் ஒன்றுக்கு செல்ல வேண்டி கட்டத்திலே இருக்கின்றது.
மக்கள் பேரெழுச்சியாக திரண்டு இந்த நாடாளுமன்றத்தில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் வீடு செல்லுமாறு கோரிக்கை விடுத்திருந்தார்கள். இதனை சட்ட ரீதியாக தவிர்த்து, சட்டங்களை சார்பாக பயன்படுத்தி இந்த நாடாளுமன்றம் தொடர்கிறது.
இந்த 225 நாடாளுமனற உறுப்பினர்களும் உடனடியாக வெளியேறி புதிய மக்கள் ஆணை ஒன்றை கோருவது தான் மக்களின் விருப்பமான விடயமாக உள்ளது. இதனை அரசியல்வாதிகள் புரிந்துகொள்ள வேண்டும்.
இன்று இருக்கக்கூடிய 75 சதவீதமான நாடாளுமன்ற உறுப்பினர்கள் தான் கடந்த காலங்களில் இந்த நாட்டினை இவர்களுடைய உறவினர்கள், பெற்ரோர்கள் என அரசியலில் இருந்து ஏதோ ஒரு வகையில் மாறி மாறி ஆட்சி செய்திருக்கிறார்கள்.
பொதுத் தேர்தல்
நாடு இன்று இருக்கும் அவலத்திற்கு இவர்களும், இவர்களின் முன்னவர்களும் பொறுப்புக்கூற வேண்டும். இந்த இனவாத, பழைமைவாத சிந்தனைகள் கொண்ட அனைத்து அரசியல்வாதிகளும் இனி வரும் காலங்களில் மக்களால் விரட்டி அடிக்கப்பட வேண்டும்.
உடனடியாக நாடாளுமன்றத்தினை கலைத்து புதிய தேர்தலினை நடத்த வேண்டும்” என்றார்.
