ஐக்கிய மக்கள் சக்தியினரின் பிரேரணை தொடர்பில் ரணில் முன்வைத்த திருத்தம்- சபாநாயகரின் அறிவிப்பு!
ஸ்ரீலங்கா அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை, அமைச்சரவைக்கு எதிராக கொண்டுவரப்பட்ட பிரேரணையாக கருத வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் ரணில் விக்ரமசிங்க திருத்தம் ஒன்றை முன்வைத்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் ரணில் விக்ரமசிங்க நேற்றைய தினம் இந்த திருத்தத்தை சபாநாயகரிடம் முன்வைத்திருந்தார்.
இந்நிலையில், எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியினால் முன்வைக்கப்பட்ட அவநம்பிக்கை பிரேரணை தொடர்பில் முன்வைத்திருந்த திருத்தம் ஏற்றுக்கொள்ள முடியாததொன்று என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அதனை நிராகரித்துள்ளார்.
இன்றைய தினம் நாடாளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பமாகிய வேளையிலேயே சபாநாயகர் இதனை அறிவித்திருந்தார்.
இதேவேளை எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட அவநம்பிக்கை பிரேரணை இரண்டாவது நாளாக இன்று விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதோடு, அது தொடர்பான வாக்கெடுப்பும் இன்று பிற்பகல் இடம்பெறவுள்ளது.