சற்றுமுன்னர் ஆரம்பமான இன்றைய நாடாளுமன்ற அமர்வு
நாடாளுமன்றம் இன்று (19) முதல் எதிர்வரும் 22ஆம் திகதி வரை கூடவுள்ள நிலையில் இன்றைய நாளுக்கான நாடாளுமன்ற அமர்வுகள் சற்றுமுன்னர் ஆரம்பமாகியுள்ளன.
சபாநாயகர் தலைமையில் இன்று காலை 09.30 மணிக்கு ஆரம்பமான நாடாளுமன்ற அமர்வு மாலை 05.30 வரை நடைபெறவுள்ளது.
காலை 09.30 முதல் 10.00 வரை நாடாளுமன்ற நிலையியற் கட்டளை 22(1) முதல் (6) வரையின் பிரகாரம் நாடாளுமன்ற அலுவல்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
காலை 10.00 முதல் 11.00 வரை வாய்மூல விடைக்கான வினாக்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதுடன் 11.00 முதல் 11.30 வரை நாடாளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் வினாக்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
காலை11.30 முதல் மாலை 5.00 வரை உண்ணாட்டரசிறை (திருத்தச்) சட்டமூலம் மீதான இரண்டாம் மதிப்பீடு இடம்பெறவுள்ளதுடன் 5.00 முதல் 5.30 வரை ஒத்திவைப்பு வேளையின் போதான எதிர்க்கட்சியின் பிரேரணைக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
நாளை (20) இலங்கை மத்திய வங்கியினால் 2025ஆம் ஆண்டுக்காக வெளியிடப்பட்ட பொருளாதார மீளாய்வு அறிக்கை தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதம் நடைபெறவுள்ளது.
அத்துடன் வியாழக்கிழமை (21) இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டுச் சட்டத்தின் கீழ் மூன்று ஒழுங்குவிதிகள் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.
மே மாதம் 22ஆம் திகதி, மறைந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான அனுதாபப் பிரேரணைகள் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக நாடாளுமன்ற பொதுச்செயலாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.
இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் உள்நாட்டு இறைவரி திருத்தச் சட்டமூலத்தின் ஊடாக நாட்டின் வரி முறையை எளிமைப்படுத்துவதே நோக்கமாகும் என பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் நிஷாந்த ஜயவீர தெரிவித்துள்ளார்.
எனினும், இந்த வரி திருத்தச் சட்டமூலத்தின் மூலம் வரி செலுத்துவதை தாமதப்படுத்தும் நபர்களுக்கு எதிராக குற்றவியல் வழக்குத் தாக்கல் செய்ய அரசாங்கம் முயற்சிப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா சுட்டிக்காட்டியுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |