திருகோணமலையில் ஆரம்பமான வாக்களிப்பு
புதிய இணைப்பு
திருகோணமலை தேர்தல் மாவட்டத்திலே இன்று காலை 10.30 மணி அளவில் 23% வாக்குப்பதிவுகள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தை மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான சாமிந்த ஹெட்டியாரச்சி குறிப்பிட்டுள்ளார்.
காலை 7.00 மணிமுதல் 318 வாக்களிப்பு நிலையங்களில் வாக்குப் பதிவுகள் இடம்பெற்று வருவதாகவும், மாவட்டத்தினை பொறுத்தவரையிலே காலநிலையும் தேர்தலுக்கு ஒத்துழைப்பதன் காரணமாக கனிசமான அளவு வாக்குப் பதிவுகள் இடம்பெறக்கூடும் என்பதனை எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பும் பலப்படுத்தப் பட்டிருப்பதுடன் மக்களும் மும்முறமாக வாக்குப்பதிவுகளை மேற்கொள்வதனை அவதானிக்க முடிகிறது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
முதலாம் இணைப்பு
இலங்கையின் நாடாளுமன்ற தேர்தலுக்கான (Sri Lanka parliamentary election) வாக்களிப்பு நடவடிக்கைகள் திருகோணமலை (Trincomalee) மாவட்டத்தில் ஆரம்பமாகியுள்ளன.
திருகோணமலையில் அமைக்கப்பட்டுள்ள 318 வாக்களிப்பு நிலையங்களிலும் இன்று (14) காலை 7.00 மணி முதல் சுமுகமான முறையில் வாக்குப் பதிவுகள் இடம்பெற்று வருகின்றதாக குறிப்பிடப்படுகின்றது.
தமிழர் பகுதிகளில் மிகவும் மந்த கதியிலான வாக்குப்பதிவுகள் இடம்பெற்று வந்த போதிலும் காலை 9.00 மணிக்குப் பின்னராக பொதுமக்கள் மும்முரமாக வாக்களிப்பில் ஈடுபட்டதனை அவதானிக்கக்கூடியதாக உள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
வாக்களிக்க தகுதி பெற்றோர்
அத்துடன் விசேடமாக வயோதிபர்கள் மும்முரமாக தமது வாக்குப் பதிவுகளை மேற்கொண்டு வருவதனை
அவதானிக்க முடிவதாக குறிப்பிட்டுள்ளார்.
திருகோணமலை, மூதூர், சேருவில ஆகிய தேர்தல் தொகுதிகளைக் கொண்ட திருகோணமலை தேர்தல் மாவட்டத்தில் இம்முறை மொத்தமாக 315,925 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.
திருகோணமலை தேர்தல் தொகுதியில் 105,005 வாக்காளர்களும் மூதூர் தேர்தல் தொகுதியில் 123,363 வாக்காளர்களும், சேருவில தேர்தல் தொகுதியில் 87,557 வாக்காளர்களும் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.
வாக்கு எண்ணும் நிலையமாக திருகோணமலை விபுலானந்தா கல்லூரியும் செயற்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |