ஊடகவியலாளர் பாரதியின் மறைவிற்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல்
சுகவீனம் காரணமாக உயிரிழந்த ஊடகவியலாளர் பாரதிக்கு யாழ்ப்பாண இந்திய துணைத்தூதரகம், ஈழ மக்கள் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் தமது இரங்கலை தெரிவித்துள்ளனர்.
இதன்படி யாழ்ப்பாணத்தின் மூத்த தமிழ் பத்திரிகையாளர் இராசநாயகம் பாரதி அவர்களின் மறைவுக்கு யாழ். இந்திய துணைத் தூதரகம் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளது. யாழ். இந்திய தூதரகம் வெளியிட்ட இரங்கல் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
மகத்தான பாராட்டுக்குரியது
தமிழ் பத்திரிகைத்துறையில் மிகுந்த அர்ப்பணிப்புடன் பணியாற்றிய பாரதி, தினக்குரல் ஞாயிறு பதிப்பின் ஆசிரியராகவும், யாழ்ப்பாணத்தில் வீரகேசரி பத்திரிகையின் பிராந்திய ஆசிரியராகவும் சேவையாற்றியவர்.
அவரது பத்திரிகை பணிகளில் வெளிப்பட்ட நேர்மை, பொறுப்புணர்வு, மற்றும் சமூகத்திற்கான அர்ப்பணிப்பு என்றும் மகத்தான பாராட்டுக்குரியது என குறிப்பிடப்பட்டுள்ளது.
டக்ளஸ் தேவானந்தா இரங்கல்
இதேபோன்று அச்சு ஊடகத் துறையில் ஆழமான தடங்களை பதித்த சிரேஸ்ட ஊடகவியலாளர் பாரதி இராஜநாயகம் அவர்களின் மறைவு, தமிழ் ஊடகத் துறைக்கு பாரிய வெற்றிடத்தை உருவாக்கி இருப்பதாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, "அமைதியான அணுகுமுறைகளையும் ஆழமான கருத்தியலையும் கொண்டிருந்த அமரர் பாரதி அவர்கள், ஊடக அறத்தின் வழிநின்று அனைத்து தரப்பினருடனும் உறவுகளை பேணியவர்.
எமது கருத்துக்களில் இருக்கின்ற நியாயங்களை புரிந்து கொண்டு ஒத்துழைப்புக்களை வழங்கியவர். அன்னாரின் இழப்பு, தமிழ் ஊடகத்துறையையும் தாண்டி தமிழ் பேசும் மக்களுக்கே பேரிழப்பாக அமைந்திருக்கிறது.
அன்னாரின் இழப்பினால் துயருற்று இருக்கும் அனைவருக்கும் எமது ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
![ReeCha](https://cdn.ibcstack.com/bucket/6721e84c63e0a.webp)