கண்ணீர்விட்டு அழுத பிரித்தானிய நிதியமைச்சர் ஆளும் கட்சியில் விரிசல்! பிரதமருக்கு நெருக்கடி
புதிய இணைப்பு
பிரித்தானியாவில் தொழிற்கட்சி அரசாங்கம்; நடைமுறைப்படுத்த முனைந்த நலன்புரிக்கொடுப்பனவுகளை மையப்படுத்தி மறுசீரமைப்பு சட்டமூலத்திற்கு ஆளுங்கட்சியில் எதிர்ப்பு உருவாகிய நிலையில் இன்று பகல் இந்த விடயம் நாடாளுமன்றத்தின் கேள்வி நேரத்தின் போது கடுமையாக வாதப்பிரதிவாதங்களை ஏற்படுத்தியது.
அந்தவேளை எதிர்க்கட்சித்தலைவர் கெமி படேனோக் இந்த விடயத்தில் பல வினாக்களை எழுப்பியதை அடுத்து நிதியமைச்சர் றேச்சல் ரீவ்ஸ் கண்ணீர் விட்டமை புதிய சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.
எனினும் நிதியமைச்சர் ரீவ்ஸ் பதவியில் இருந்து விலகப்போவதான ஊகங்களை மறுத்துள்ள பிரதமர் பணியகம் அவர் நிதியமைச்சு பொறுப்பில் நீடிப்பார் என்றும் குறிப்பிட்டுள்ளது.
கொன்சவேட்டிவ் கட்சித் தலைவர் கெமி படேனோக்கின் தொடர்ச்சியான கேள்விகளுக்குப் பின்னர் ரீவ்ஸ் தனது கண்களில் இருந்து வழிந்த கண்ணீரைத் துடைத்தமை பகிரங்கமாக தெரிந்தது.
இந்த சட்டமூலத்திற்கு எதிராக ஆளும் தரப்பில் உள்ள பல நாடளுமன்ற உறுப்பினர்களே வாக்களித்து அதனை தோற்கடிக்கலாம் என்ற அச்சத்தில் இறுதிநேரத்தில் அதில் அவசர மாற்றங்களை செய்து நிதியமைச்சர் நாடாளுமன்ற வாக்கெடுப்புக்கு விட்டமை பிரதமர் கெயர் ஸ்டாமருக்கு சவாலான நிலையை உருவாக்கியுள்ளது.
உட்கட்சியில் இந்த சட்டமூலத்திற்கு எதிராக உருவாகிய கிளர்ச்சி நிலையை தவிர்க்க நிதியமைச்சர் ரேச்சல் ரீவ்ஸ்சும் வேலை மற்றும் ஓய்வூதிய அமைச்சர் லிஸ் கெண்டலும் இந்த சட்டமூலத்தில் இறுதி நிமிட சலுகைகளை வழங்கிபின்னர் இந்த மசோதா நேற்றிரவு 335 வாக்குகளுடன் நிறைவேற்றப்பட்டது.
எனினும் இந்த சட்டமூலத்திற்கு எதிராக 260 வாக்குகள் கிட்டியிருந்தன. இதில் 49 வாககுகள் ஆளும் தொழிற்கட்சி உறுப்பினர்களின் வாக்குகளாகும், ஆளுந்தரப்பு உறுப்பினர்களில் 18 பேர் வாக்களிப்பில் பங்கெடுக்கவில்லை. ஈழத்தமிழ் பூர்விக நாடளுமன்ற உறுப்பினரான உமாகுமரன் இந்த சட்டமூலத்துக்கு ஆதரவாக வாக்களித்திருந்தார்.
இந்த நிலையில் இன்று காலை நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற பிரதமரின் கேள்வி நேரத்தின் போது நிதியமைச்சர் முற்றிலும் பரிதாபகரமானவராக இருப்பதாகவும், அரசாங்கத்தின் திறமையின்மைக்கு அவர் ஒரு மனிதக் கேடயமாக பயன்படுத்தப்படுவதாக எதிர்க்கட்சிதலைவர் கெமி பாடெனோக் கண்டித்தபோது ரீவ்ஸ் தனதுகண்ணகளில் இருந்தவந்த கண்ணீரைத் துடைத்த போது துணைத் பிரதமாராக ஏஞ்சலா ரெய்னர், அவருக்கு ஆறுதல் வார்த்தைகளை கூறி சமாதானப்படுத்தியுள்ளார்.
நலன்புரிதிட்டங்கள் மீளெடுக்கப்பட்டதால் ஏற்பட்ட நிதிசுமை இடைவெளியை எவ்வாறு சமாளிப்பது என்பது குறித்து இன்னும் உறுதியான திட்டங்கள் எதுவும் இல்லையென்பதால் எதிர்காலத்தில் வரி அதிகரிப்பு இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
முதலாம் இணைப்பு
பிரித்தானிய பிரதமருக்கு நெருக்கடி! ஆளுந்தரப்பு உறுப்பினர்களே எதிர்த்து வாக்களிப்பு
பிரித்தானியாவில் (UK) தொழிற்கட்சி அரசாங்கம் நடைமுறைப்படுத்த முனையும் சமூக கொடுப்பனவுகள் மற்றும் நலன்புரிக்கொடுப்பனவுகளை மையப்படுத்திய மறுசீரமைப்பு சட்ட மசோதா ஆளுங்கட்சியில் எதிர்ப்பையும் ஒரு சர்ச்சையை உருவாக்கியுள்ளது.
இந்த சட்ட மசோதாவுக்கு எதிராக தமது தரப்பு நாடளுமன்ற உறுப்பினர்களே வாக்களித்து அதனை தோற்கடிக்கலாம் என்ற அச்சத்தில் இறுதிநேரத்தில் அதில் அவசர மாற்றங்கள் செய்யப்பட்டு நாடாளுமன்ற வாக்கெடுப்புக்கு விடப்பட்டமை பிரதர் கெயர் ஸ்டாமருக்கு சவாலான நிலையை உருவாக்கியுள்ளது.
கிளர்ச்சி நிலை
உட்கட்சியில் இந்த மசோதாவுக்கு எதிராக உருவாகிய கிளர்ச்சி நிலையை தவிர்க்க நிதியமைச்சர் ரேச்சல் ரீவ்ஸ்சும் வேலை மற்றும் ஓய்வூதிய அமைச்சர் லிஸ் கெண்டலும் மசோதாவில் இறுதி நிமிட சலுகைகளை வழங்கிய பின்னர் நேற்றிரவு 335 வாக்குகளுடன் நிறைவேற்றப்பட்டது.
எனினும் குறித்த மசோதாவுக்கு எதிராக 260 வாக்குகள் கிட்டியிருந்தன. இதில் 49 வாக்குகள் ஆளும் தொழிற்கட்சி உறுப்பிகர்களின் வாக்குகளாகும், ஆளுந்தரப்பு உறுப்பினர்களில் 18 பேர் வாக்களிப்பில் பங்கெடுக்கவில்லை.
ஈழத்தமிழ் பூர்வீக நாடளுமன்ற உறுப்பினரான உமா குமரன் இந்த சட்டமூலத்துக்கு ஆதரவாக வாக்களித்திருந்தார்.
ஸ்ராமருக்கு உட்கட்சி நெருக்கடி
பெனிபிற் எனப்படும் நலன்புரி கொடுப்பனவுகளில் வெட்டுகளை செய்வதன் மூலம் 2030 ஆம் ஆண்டுக்குள் 5 பில்லியன் பவுணஸ் தொகை செலவீனத்தை சேமிக்கும் வகையில் புதிய சட்ட மசோதா வடிவமைக்கப்பட்டிருந்தது.
ஆனால் தற்போது இந்த மசோதாவில் மேற்கொள்ளப்பட்ட தளர்வுகள் நிதியமைச்சர் ரேச்சல் ரீவ்சின் அரசியல் எதிர்காலத்தை தொழிற்கட்சிக்குள் கேள்விக்குறியாகியுள்ளது.
இந்த விடயம் இன்னொரு புறத்தில் முன்னயை கன்சவேட்டிவ் ஆட்சிக்காலத்தில் பொறிஸ் ஜோன்சன் மற்றும் லிஸ் ட்ரஸ் ஆகிய பிரதமர்கள் எதிர்நோக்கியதைப் போன்ற உட்கட்சி நெருக்கடியை பிரதமர் ஸ்ராமருக்கும் அவரது கட்சிக்குள் உருவாக்கியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
