அரசியல் ஆய்வாளர் ஜோதிலிங்கம் திடீர் மறைவு - கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இரங்கல்
சிரேஷ்ட அரசியல் ஆய்வாளரும் சிந்தனையாளருமான ஜோதிலிங்கத்தின் மறைவு தமிழ் மக்களுக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பு எனத் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
அன்னாரின் மறைவு தொடர்பாக வெளியிட்டுள்ள விசேட இரங்கல் செய்தியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
ஜோதிலிங்கம் வெறும் ஆசிரியராகவோ வழக்கறிஞராகவோ மட்டுமன்றி, தமிழ் மக்களின் எதிர்காலம், தமிழ் தேசியம் மற்றும் தமிழ் தேசத்தின் சுயநிர்ணய உரிமை குறித்து ஆழமாகச் சிந்தித்த சிறந்த சிந்தனையாளராகத் திகழ்ந்தார் எனக் கஜேந்திரகுமார் தெரிவித்துள்ளார்.
ஆபத்துகளை முன்கூட்டியே கணித்து
தமிழ் மக்கள் எதிர்கொண்ட அரசியல் ஆபத்துகளை முன்கூட்டியே கணித்து, பொதுமக்களிடையே அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக அவர் தொடர்ந்து செயற்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், புவிசார் அரசியல், உலக அரசியல் போக்குகள் மற்றும் பேரினவாதம் போன்ற சிக்கலான விடயங்களைச் சாதாரண மக்களும் புரிந்துகொள்ளும் வகையில் தனது எழுத்துகள் மூலம் தெளிவுபடுத்தும் ஆற்றல் அவருக்கு இருந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஜோதிலிங்கத்தின் மறைவால் தமிழ் மக்கள் எதிர்காலத்தில் பெரும் இழப்பை உணர்வார்கள் எனத் தெரிவித்த கஜேந்திரகுமார் பொன்னம்பலம், துயரத்தில் இருக்கும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துள்ளார்.
தனிப்பட்ட முறையிலும், தமிழ் தேசிய பேரவை, தமிழ் தேசிய மக்கள் முன்னணி மற்றும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் சார்பாகவும் தனது இரங்கலையும் மரியாதையையும் தெரிவிப்பதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நாட்டு நடப்பு | சிறப்பு நேரலை