யாழ்ப்பாணத்தில் நீண்ட காலமாக ஒரே பதவியில் உள்ள அதிகாரிகள் - அம்பலப்படுத்தும் எம்.பி
யாழ்ப்பாணத்தில் நீண்டகாலமாக ஒரே பதவியில் தொடர்ச்சியாகப் பணியாற்றும் உயர் அதிகாரிகள் தொடர்பான நிர்வாக நடைமுறைகள் வெளிப்படையாக விளக்கப்பட வேண்டும் என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் புதிதாக நான்கு மதுபான விற்பனை நிலையங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளமை தொடர்பில் கருத்து வெளியிடும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
மதுபான விற்பனை நிலையங்களுக்கான அனுமதி வழங்கும் செயல்முறையில், குறித்த பகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தகவல் வழங்கப்பட வேண்டிய நடைமுறை உள்ளதா என்பது தெளிவுபடுத்தப்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.
மதுபான நிலையங்களுக்கான அனுமதி
மக்கள் பிரதிநிதிகளுக்கு எவ்வித தகவலும் வழங்காமல் இத்தகைய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தால் அது தொடர்பில் உரிய விளக்கம் அளிக்கப்பட வேண்டும் எனவும் அவர் கோரினார்.

அதேவேளை யாழ்ப்பாணத்தில் உயர் நிர்வாகப் பதவிகளில் ஒரே அதிகாரிகள் நீண்ட காலமாக தொடர்ச்சியாகப் பணியாற்றுவது தொடர்பாகவும் பொதுமக்கள் மத்தியில் கேள்விகள் எழுந்துள்ளதாகக் குறிப்பிட்ட இளங்குமரன் நீண்ட காலம் ஒரே இடத்தில் பணியாற்றுவதால் நிர்வாகத்தின் வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல் மற்றும் கண்காணிப்பு பாதிக்கப்படாத வகையில் உரிய நடைமுறைகள் உறுதி செய்யப்பட வேண்டும் என்றார்.
மதுபான நிலையங்களுக்கான அனுமதி வழங்கப்பட்டமை தொடர்பான முழுமையான நடைமுறை அதில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் பொறுப்புகள், மக்கள் பிரதிநிதிகளுக்கு தகவல் வழங்கப்பட்டதா என்பன குறித்து தெளிவுபடுத்தப்பட வேண்டும் எனவும் யாழ்ப்பாணத் தில் நீண்ட காலமாக ஒரே பதவியில் பணியாற்றும் உயர் அதிகாரிகள் தொடர்பான நிர்வாக நடைமுறைகளும் வெளிப்படையாக விளக்கப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
ஊழல் இடம்பெற்றுள்ளதாக உறுதியான ஆதாரங்கள் இல்லாத நிலையில் முன்கூட்டியே முடிவுகளுக்கு வருவதற்குப் பதிலாக இத்தகைய குற்றச்சாட்டுகள் தொடர் பில் உரிய விசாரணை, வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறல் உறுதி செய்யப்பட வேண்டும் எனவும் இளங்குமரன் தெரிவித்தார்.
தேவையான மாற்றங்கள்
அடுத்த ஆண்டில் யாழ்ப்பாணத்தின் நிர்வாகத் துறையில் தேவையான மாற்றங்கள் ஏற்பட வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

கடந்த காலங்களில் பொதுமக்கள் மற்றும் சமூகப் பிரதிநிதிகள் தம்முடன் கலந்துரையாடிய போது நிர்வாகத்தில் வெளிப்படைத் தன்மை, பொறுப்புக்கூறல் மற்றும் அதிகாரிகளின் பணியிட மாற்றம் தொடர்பில் தங்களது எதிர்பார்ப்புகளைத் தெரிவித்துள்ளதாகவும் அவர் கூறினார்.
“இது ஒருவரை தனிப்பட்ட முறையில் குறிவைக்கும் விடயம் அல்ல. மக்களின் நம்பிக்கையை வலுப்படுத்தும் வகையில் வெளிப்படையானதும் பொறுப்புக் கூறலுட னும் கூடிய நிர்வாகத்தை உறுதி செய்வதே முக்கியமானது” என க.இளங்குமரன் தெரிவித்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |