போலி முகநூல் கணக்குகள் தொடர்பில் விசாரணை : ஆனந்த விஜேபால எச்சரிக்கை
தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் இருந்தவாறு போலியான முகப்புத்தக கணக்குகளை தயாரித்து சமூக வலைத்தளங்களில் இனங்களுக்கிடையில் முரண்பாடுகளை ஏற்படுத்தும் செயற்பாடுகள் அவதானிக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
இவ்வாறான செயற்பாடுகள் தொடர்பான பதிவுகள் குறித்து சைபர் குற்றப்பிரிவு விசாரணைகளை மேற்கொண்டுள்ளதுடன் ஒருசில பகுதிகளில் கைதுகளும் இடம்பெற்றுள்ளதாக அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
நாடாளுமன்றத்தில் இன்று (09) நடைபெற்ற அமர்வில் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.ஹிஸ்புல்லா முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கையில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
வெறுப்பு பேச்சுக்களை பகிரும் செயற்பாடு
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், முஸ்லிம் சமூகத்தினரை மாத்திரம் இலக்காக் கொண்டு சமூக வலைத்தளங்களில் வெறுப்பு பேச்சுக்கள் மற்றும் முரண்பாடுகளை ஏற்படுத்தும் கருத்துக்கள் பதிவேற்றம் செய்யப்படுவதாக எவ்வித முறைப்பாடுகளும் மற்றும் தகவல்களும் கிடைக்கவில்லை.

இனங்களுக்கிடையில் முரண்பாடுகளை ஏற்படுத்தும் வகையில் சமூக வலைத்தளங்களில் கருத்துக்கள் பதிவேற்றம் செய்யப்படுவதை அவதானிக்க முடிகிறது.
தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் இருந்தவாறு போலியான முகப்புத்தக கணக்குகளை தயாரித்து அதனூடாக வெறுப்பு பேச்சுக்களை பதிவேற்றம் செய்யும் செயற்பாடுகள் அவதானிக்கப்பட்டுள்ளன.
சைபர் குற்றப்பிரிவு
இனங்களுக்கிடையில் முரண்பாடுகளை ஏற்படுத்தும் வெறுப்பு பேச்சுக்கள் தொடர்பான பதிவுகள் குறித்து சைபர் குற்றப்பிரிவு விசாரணைகளை மேற்கொண்டுள்ளது. ஒருசில பகுதிகளில் கைதுகளும் இடம்பெற்றுள்ளன. நீதிமன்றத்துக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இனநல்லிணக்கத்துக்கு பாதிப்பு ஏற்படுத்தும் செயற்பாடுகள் மற்றும் வெறுப்பு பேச்சுக்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
கடந்த காலங்களில் இனவாதத்தை முன்னிலைப்படுத்திச் செயற்பட்ட தரப்பினர் இன்றும் பழைய பழக்கத்தில் தான் உள்ளார்கள். கடந்த இரண்டு ஆண்டுகளில் நாட்டில் எவ்வித முரண்பாடுகளும் தோற்றம் பெறவில்லை. இனிவரும் காலங்களிலும் அவ்வாறான நிலை ஏற்படாது“ என தெரிவித்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |