எரிபொருள் விலையில் நடக்கும் மறைமுகக் கொள்ளை: சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு
இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம், பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனையின் போது ஒரு லீட்டருக்கு 100 முதல் 120 ரூபாய் வரை அதிகப்படியான இலாப வரம்பைக் கொண்டு நுகர்வோரைச் சுரண்டி வருவதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
முன்னாள் எரிசக்தி அமைச்சர் பாடலி சம்பிக்க ரணவக்க (Patali Champika Ranawaka) இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.
அத்துடன், நாட்டில் இயங்கும் ஏனைய 3 தனியார் எரிபொருள் விநியோக நிறுவனங்களுக்கும் சமமான சந்தை வாய்ப்பை வழங்காமல் சிபெட்கோ தடுத்து வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கூட்டுத்தாபனம்
இது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள அவர்,
2026 அக்டோபர் 30 ஆம் திகதிய நிலவரப்படி உலகச் சந்தையில் நிலவிய எரிபொருள் இறக்குமதிச் செலவுகளைப் பின்வருமாறு பட்டியலிட்டுள்ளார்,
- டீசல் (Diesel) இறக்குமதிச் செலவு: பேரல் ஒன்றுக்கு 162 அமெரிக்க டொலர்கள்.
- 92 ஒக்டேன் பெட்ரோல் (92-Octane Petrol): பேரல் ஒன்றுக்கு 138 அமெரிக்க டொலர்கள்.
- பிரென்ட் கச்சா எண்ணெய் (Brent Crude Oil): பேரல் ஒன்றுக்கு 114 அமெரிக்க டொலர்கள்.

உலகச் சந்தை நிலவரப்படி சுத்திகரிக்கப்பட்ட எரிபொருளாக இறக்குமதி செய்யப்பட்டால் ஒரு லீட்டர் டீசலின் அடக்கவிலை ரூபாய் 336 ஆகவும் மற்றும் பெட்ரோல் லீட்டர் ஒன்றின் அடக்கவிலை ரூபாய் 280 ஆகவும் மட்டுமே இருக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
இருப்பினும், சிபெட்கோவுக்குச் சொந்தமான சப்ளஸ்கந்த சுத்திகரிப்பு ஆலையில் கச்சா எண்ணெயைச் சுத்திகரித்து உற்பத்தி செய்யப்படும் போது பெட்ரோல் மற்றும் டீசல் ஆகிய இரண்டுக்குமே ஒரு லீட்டருக்கான அடக்கவிலை ரூபாய் 236 ஆக மட்டுமே அமையும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமது சொந்தச் சுத்திகரிப்பு ஆலையில் குறைந்த செலவில் உற்பத்தி செய்யப்படும் எரிபொருளுக்குக்கூட, அதிக விலையை நிர்ணயித்து நுகர்வோரிடமிருந்து சிபெட்கோ முறையற்ற முறையில் அதிக இலாபம் ஈட்டி வருவதாக முன்னாள் அமைச்சர் குற்றம் சாட்டியுள்ளார்.
இதன் மூலம் சந்தையில் போட்டித்தன்மையைக் குறைத்து தனியார் எரிபொருள் நிறுவனங்களுக்கு நியாயமான போட்டிச் சூழலை மறுத்து வருவதாகவும் அவர் சாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |