ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுக்கும் சட்டமூலத்திற்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றத்தில் விசாரணை
அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுக்கும் சட்டமூலத்தின் அரசியலமைப்புத் தன்மையை சவாலுக்கு உட்படுத்தி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள விசேட தீர்மான மனுக்கள் மீதான விசாரணை ஆம்பமாகவுள்ளது.
இவ் மனுக்களை விசாரணை செய்வதற்காகத் தலைமை நீதியரசர் பிரீதி பத்மன் சூரசேன தலைமையிலான மூவர் அடங்கிய விசேட உச்சநீதிமன்ற அமர்வு பெயரிடப்பட்டுள்ளது.
இச் சட்டமூலத்தின் பல்வேறு பிரிவுகள் அரசியலமைப்பிற்கு முரணானவை என அறிவிக்கக்கோரி இதுவரையில் 26 விசேட மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
நீதிபதிகள் அமர்வு
தலைமை நீதியரசர் பிரீதி பத்மன் சூரசேன தலைமையிலான நீதிபதிகள் அமர்வில் உச்ச நீதிமன்ற நீதிபதிகளான அசல வெங்கப்பலி மற்றும் சம்பத் அபயகோன் ஆகியோர் அங்கத்துவம் வகிக்கின்றனர்.

இக் கூட்டு மனுக்கள் அனைத்தும் இன்று (04-11-2026) காலை 10:00 மணியளவில் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.
கடந்த 2026 அக்டோபர் ஆறாம் திகதியிட்ட வர்த்தமானி மேலதிக வெளியீடாகப் பிரசுரிக்கப்பட்டு, அக்டோபர் 20 அன்று நாடாளுமன்ற நிகழ்ச்சிநிரலில் இச் சட்டமூலம் சமர்ப்பிக்கப்பட்டது.
குற்றங்களைத் தடுத்தல்
எல்லை கடந்த ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களுக்கு எதிரான ஐக்கிய நாடுகளின் உடன்படிக்கைக்கு சட்டப்பூர்வ வடிவம் கொடுப்பதே இச் சட்டமூலத்தின் முதன்மை நோக்கமாகும்.
தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் ஒத்துழைப்பை வலுப்படுத்தி, தீவிர குற்றங்களைத் தடுத்தல், விசாரணை செய்தல் மற்றும் குற்றவாளிகளைத் தண்டித்தல் ஆகியவற்றை விரைவுபடுத்த இச் சட்டமூலம் இலக்கு வைத்துள்ளது.

சிவில் அமைப்புகள் மற்றும் மனித உரிமைகள் அமைப்புகளினால் இச் சட்டமூலத்தின் சில பிரிவுகள் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகின்றன.
சந்தேகநபர்களை 72 மணிநேரம் வரை நீதவான் முன் முன்னிலைப்படுத்தாமல் தடுத்து வைக்கும் அதிகாரம் மற்றும் அமைப்புகளுடன் தொடர்பில் இருப்பவர்களைக் குற்றவாளிகளாக்கும் சட்டப் சரத்துகள் மனித உரிமைகளையும் பேச்சுரிமையையும் முடக்கும் எனக் கூறி இம் மனுக்கள் நீதிமன்றத்தில் சவாலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |