நிலக்கரி இறக்குமதி ஊழல்...! விசாரணைக்கு மறுப்பு தெரிவித்த எதிர் தரப்பு
குறைந்த தரம் கொண்ட நிலக்கரி இறக்குமதி தொடர்பான ஜனாதிபதி விசேட விசாரணை ஆணைக்குழுவின் முன்னிலையில் தாம் சாட்சியமளிக்கப்போவதில்லை என முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க உள்ளிட்ட எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று அறிவித்துள்ளது.
இது குறித்து நேற்று (12-05-2026) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் சம்பிக்க ரணவக்க கருத்து தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், எஸ்.எம். மரிக்கார், அஜித் பி. பெரேரா, டி.வி. சானக்க மற்றும் தாம் உள்ளிட்ட எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் புகைப்படங்களைச் சமூக வலைதளங்களில் பகிர்ந்து தங்களைச் சாட்சியமளிக்க வருமாறு வலியுறுத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
ஆணைக்குழுவில் முன்னிலை
குறித்த அறிவிப்பை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் கீழான ஜே.வி.பி (JVP) ஊடகப் பிரிவு விடுத்திருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், அந்த ஆணைக்குழுவில் முன்னிலையாகத் தங்களுக்கு எந்தக் காரணமும் இல்லை என அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

மக்களால் வாக்களிக்கப்படாத அல்லது மக்கள் பிரதிநிதியாக இல்லாத டில்வின் சில்வாவால் மேற்பார்வை செய்யப்படும் இந்த ஆணைக்குழுவின் முன்னிலையில் நாங்கள் முன்னிலையாக மாட்டோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தேவையான ஆவணங்கள் ஏற்கனவே ஆணைக்குழுவிடம் உள்ளதாகவும் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |