பல வருட போராட்டத்தின் பலன் - யாழில் பலமற்ற, தரமற்ற ஒரு வீதி!
பல மில்லியன் ரூபா செலவில் புனரமைக்கப்பட்டு வரும் யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு, கொடுக்குளாய் – இயக்கச்சி அபாய வெளியேற்றப் பாதை தற்போது வெடிப்பு விழுந்து கீழ் இறங்கும் நிலைக்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி உதவியுடன், பல மில்லியன் ரூபா செலவில் கடந்த சில மாதங்களாக குறித்த வீதி புனரமைக்கப்பட்டு வந்த நிலையில், பணிகள் முடிவுறும் தருவாயில் இருக்கும் போது, புதிதாக போடப்பட்ட வீதியே வெடிப்பு விழத் தொடங்கியுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.
குறிப்பாக சில பகுதிகளில் வீதியில் அதிக அளவில் வெடிப்புகள் உருவாகி, தரை கீழ் இறங்கி இருப்பதை நேரடியாக அவதானிக்க முடிவதாக தெரிவிக்கப்படுகிறது.
இது பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
வடமராட்சி கிழக்கு மக்களுக்கான முக்கிய அபாய வெளியேற்றப் பாதையாக காணப்படும் இந்த வீதியை புனரமைத்து தருமாறு மக்கள் பல வருடங்களாக கோரிக்கை விடுத்து வந்த நிலையில், பெரும் எதிர்பார்ப்புகளுடன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்தப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.
ஆனால், இவ்வளவு பெரிய நிதி ஒதுக்கீட்டுடன் மேற்கொள்ளப்பட்ட புனரமைப்பு பணிகள், முடிவடையும் முன்பே இவ்வாறு சேதமடைந்துள்ளமை, பணிகளின் தரம் குறித்து கடும் சந்தேகங்களை எழுப்பியுள்ளது.
- பொதுமக்களின் உயிர் பாதுகாப்புக்காக அமைக்கப்படும் அபாய வெளியேற்றப் பாதை இவ்வாறு தரமற்ற முறையில் அமைக்கப்பட்டதற்கு யார் பொறுப்பு?
- பொது நிதி முறையாக பயன்படுத்தப்பட்டதா?
- இதற்கான தொழில்நுட்ப கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டதா?
என்ற கேள்விகள் தற்போது மக்களிடையே எழுந்துள்ளன.
சம்பந்தப்பட்ட அரச அதிகாரிகள் உடனடியாக தலையிட்டு, குறித்த வீதி புனரமைப்பு பணிகளை ஆய்வு செய்து, குறைபாடுகளுக்கு பொறுப்பானவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்துகின்றனர்.




| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
இரண்டுமுறை பாரிய படுகொலைகளைச் சந்தித்த கொக்கட்டிச்சோலை… 2 நாட்கள் முன்