சிரேஷ்ட பிரஜைகளுக்கான 15% வட்டி வீதம் - அரசுக்கு பறந்த கோரிக்கை
சிரேஷ்ட பிரஜைகள் மற்றும் ஓய்வூதியர்களுக்கு கடந்த காலத்தில் வழங்கப்பட்ட 15 சதவீத வட்டி வீதம் தற்போது பறிக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ குற்றம் சாட்டியுள்ளார்.
பொய்களைக் கூறி ஆட்சிக்கு வந்த தற்போதைய அரசு நாட்டின் விவசாயிகள், மீனவர்கள் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களை முற்றிலும் ஏமாற்றிவிட்டது என்று சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.
அபிவிருத்தி உத்தியோகத்தர்களுடன் நேற்று எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற விசேட கலந்துரையாடலின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அரச சேவையில் பதவி உயர்வு
அவர் மேலும் கூறியதாவது, நமது நாட்டின் 15 ஆயிரம் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்காக நாம் நாடாளுமன்றத்தில் தொடர்ந்து குரல் எழுப்புவோம்.

இலவசக் கல்வியின் ஊடாகப் பட்டத்தைப் பெற்ற இவர்கள், தங்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வதற்காகச் சேவைப் பிரமாணக் குறிப்பு உருவாக்கப்படுவதற்கு முன்னரே பணியில் அமர்த்தப்பட்டனர்.
இருப்பினும், இதுவரை அவர்களுக்கான சேவைப் பிரமாணக் குறிப்பு உருவாக்கப்படவில்லை.
அரச சேவையில் ஈடுபட்டுள்ள இவர்களுக்கு முறையான ஆட்சேர்ப்புப் பரீட்சை, சமமான சம்பள அளவு அல்லது பதவி உயர்வு முறைமைகள் கூட இதுவரையில் உருவாக்கப்படவில்லை.
பட்டத்துக்கு ஏற்ற பதவிகள் இல்லாமை மற்றும் பட்டதாரிகளை விடக் குறைந்த தகைமைகளைக் கொண்டவர்கள் இவர்களைக் கண்காணிக்கும் அவல நிலை காணப்படுகின்றது.
உரங்களுக்கான மானிய விலை
ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் இவர்களின் பெயர் 'சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர்' என மாற்றப்பட்டு ஏமாற்றப்பட்டனர். இந்த அநீதிக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி தொடர்ந்து போராடும் என்பதுடன், அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் இது குறித்து அவதானத்தைத் திருப்புவேன்.

சிரேஷ்ட பிரஜைகள் மற்றும் ஓய்வூதியர்களின் 10 இலட்சம் மற்றும் 15 இலட்சம் ரூபா வரையான சேமிப்புகளுக்கு கடந்த காலத்தில் வழங்கப்பட்ட 15 சதவீத வட்டி வீதம் தற்போது பறிக்கப்பட்டுள்ளது.
விவசாயிகளின் விதை மற்றும் உரங்களுக்கான மானிய விலை மற்றும் உத்தரவாத விலைகள் இன்னும் வழங்கப்படவில்லை.
இதனால் ஒவ்வொரு விவசாயியும் கடுமையான நிர்க்கதிக்குள்ளாகியுள்ளனர். மீனவர்களுக்கு வழங்குவதாகக் கூறப்பட்ட வளங்களும் சலுகைகளும் தற்போதைய அரசால் பெருமளவு குறைக்கப்பட்டுள்ளன என்றார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |