அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானங்களால் மக்கள் நெருக்கடியில் : சாகர காரியவசம்
சிறிலங்கா அரசாங்கத்தின் மீது வரிச்சலுகை வழங்கியது தவறு என்று குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. தற்போது வரி விதிப்புக்கு எதிராக ஒரு தரப்பினர் போராட்டத்தில் ஈடுபடுகின்றார்கள்.
போராட்ட காலத்தில் முன்வைக்கப்பட்ட விடயங்களையே அதிபர் ரணில் விக்ரமசிங்க தற்போது செயற்படுத்துகிறார் என சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.
கொழும்பில் உள்ள சிறிலங்கா பொதுஜன பெரமுன காரியாலயத்தில் நேற்று (04) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
ஆட்சி மாற்றம்
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“சிறிலங்கா பொதுஜன பெரமுன மீது மக்கள் வைத்த நம்பிக்கை பலவீனமடைய கூடாது என்பதற்காகவே அதிபர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்தினோம்.

ராஜபக்ஷர்கள் மீது போலியான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு பாரிய போராட்டம் மேற்கொள்ளப்பட்ட பின்னணியில் தான் ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்தினோம்.
இந்தநிலையில் பொருளாதார மீட்சிக்காக அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானங்களால் மக்கள் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளார்கள். இதனை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது.
பொருளாதாரக் கொள்கை
அதிபரின் கொள்கைக்கு முரணாக நாங்கள் பொருளாதார கொள்கைகளை முன்வைப்போம். இது தொடர்பில் நாட்டு மக்களே தீர்மானம் எடுக்க வேண்டும்.

திறந்த மற்றும் மூடிய பொருளாதார கொள்கைகளை முழுமையாக நடைமுறைப்படுத்தாமல் நடுநிலையான பொருளாதாரக் கொள்கைகளை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று நாங்கள் குறிப்பிட்டதை நாட்டு மக்களும், எதிர்க்கட்சியினரும் தற்போது ஏற்றுக்கொண்டுள்ளார்கள்“ எனத் தெரிவித்தார்.