மீண்டும் விறகு அடுப்புக்குத் தள்ளப்பட்ட மக்கள்...! அசேல சம்பத் கடும் சாடல்
பல குடும்பங்கள் மீண்டும் பாரம்பரியமான விறகு மற்றும் சிரட்டை அடுப்புகளை நாட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன என இலங்கை பாவனையாளர் முன்னணி கவலை தெரிவித்துள்ளது.
ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே இலங்கை பாவனையாளர் முன்னணி தலைவர் அசேல சம்பத் இதனை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், "எரிவாயுவைப் பயன்படுத்த முடியாத அளவிற்கு விலை உயர்ந்துள்ளதால், இனிவரும் காலங்களில் மக்கள் மீண்டும் பழைய முறையிலான விறகு அடுப்புகளுக்கே திரும்ப வேண்டியுள்ளது.
விறகு அடுப்புகளுக்கே திரும்ப வேண்டிய நிலை
குறிப்பாக, சிரட்டைகளைப் பயன்படுத்தி எவ்வாறு அடுப்புகளை உருவாக்குவது என்பது குறித்து மக்களுக்குக் கற்றுக்கொடுக்க வேண்டிய துரதிஷ்டவசமான நிலைக்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம்.

எரிவாயு விலையேற்றத்தால் உணவக உரிமையாளர்கள் பெரும் நெருக்கடியைச் சந்தித்துள்ளனர். இதன் விளைவாக கொத்து, பிரைட் ரைஸ் போன்ற உணவுகளின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
சாதாரண மக்கள் அன்றாடம் உட்கொள்ளும் பராட்டா, வடை மற்றும் தேநீர் போன்ற உணவுகளின் விலைகளும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
போஷாக்கு மட்டத்தை பாதிக்கும்
இது குறைந்த வருமானம் பெறுவோரின் போஷாக்கு மட்டத்தைப் பாரியளவில் பாதிக்கும். மனிதாபிமான அடிப்படையில், மக்களுக்குக் கட்டுப்படியாகக்கூடிய விலையில் (உதாரணமாக 200 ரூபாவிற்கு) சோறு மற்றும் பருப்பு போன்ற அடிப்படை உணவுகளை வழங்க முன்வருமாறு உணவக உரிமையாளர்களிடம் வேண்டுகோள் விடுக்கின்றோம்.

முறையான திட்டமிடல் இல்லாத தன்னிச்சையான விலை உயர்வுகள் மற்றும் நீர் விநியோகக் குறைபாடுகளால் மக்கள் அத்தியாவசியத் தேவைகளுக்காகப் போராட வேண்டியுள்ளது.
முந்தைய காலங்களில் விலைகளைக் குறைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட போதிலும், தற்போதைய ஆட்சியாளர்கள் நிறுவனங்களின் இலாபத்தையே முதன்மையாகக் கருதுகின்றனர்.
நீர் ஆதாரங்கள் நிறைந்த இலங்கையில் தடையற்ற நீர் விநியோகத்தை வழங்கத் தவறியுள்ள அரசாங்கம், கிராம மட்டங்களில் கிணறுகள் மற்றும் குழாய் கிணறு திட்டங்களையாவது ஊக்குவிக்க வேண்டும்.

தற்போதைய பொருளாதார நெருக்கடியில் நுகர்வோரைப் பாதுகாக்க அரசாங்கம் உடனடி மாற்றுத் திட்டங்களை முன்னெடுக்கத் தவறினால், எதிர்காலத்தில் மக்கள் பெரும் பட்டினிச் சாவுகளைச் சந்திக்க நேரிடும்." - அசேல சம்பத் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |