மரண அச்சத்தில் மக்கள் -அரசின் செயற்பாடு தொடர்பில் கடும் குற்றச்சாட்டு
இலங்கையில் பொதுமுடக்கத்தை நடைமுறைப்படுத்துமாறு மருத்துவ நிபுணர்கள், பேராசிரியர்கள் மற்றும் எதிர்க்கட்சியினர் கோரி வந்தாலும் மக்களை மரணப்பாதைக்கே ஸ்ரீலங்கா அரசாங்கம் இட்டுச் செல்வதாக ஐக்கிய மக்கள் சக்தி குற்றஞ்சாட்டியுள்ளது.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார், இலங்கை மக்கள் இன்று மரண அச்சத்தில் உறைந்துபோயிருப்பதாகவும் உடனடியாக ஒரு மாதகாலத்திற்கு பொதுமுடக்கத்தை நடைமுறைப்படுத்துமாறும் வலியுறுத்தியுள்ளார்.
ஸ்ரீலங்கா அரசாங்கத்தினால் மக்களுக்கு கொத்துக்கொத்தாக கோவிட் தடுப்பூசியளிக்கப்பட்டு வருகின்றது. ஆனால் அதன் பின்னணியில் எமக்கு சந்தேகம் உள்ளது. டெல்டா திரிபடைந்த தொற்று என தொற்றுக்கள் பரவுகின்ற நிலையில், வருகின்ற நவம்பர் மாதத்தில் மாகாண சபைகளுக்கான தேர்தல் நடத்தப்படலாம் என கூறப்படுகின்றது.
இந்த நிலையில் நாங்கள் அதிகளவானவர்களுக்குத் தடுப்பூசியளித்துவிட்டோம் என்கின்ற பிரசாரத்தை முன்னெடுப்பதற்காகவே ஸ்ரீலங்கா அரசாங்கம் இதனை செய்கின்றதாகவே பார்க்கின்றோம். இரண்டு தடுப்பூசிகள் இதுவரை பலருக்கும் அளிக்கப்படவில்லை.
கொவிட் -19 இன் மோசமான நிலையை கருத்தில் கொண்டு, செப்ரெம்பர் 20 ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியில் முடக்கலை அமுல்படுத்துமாறு மருத்துவர்களும் கேட்கின்றார்கள். நாங்களும் கேட்கின்றோம். நாட்டில் உள்ள அபாயகரமான சூழ்நிலையை மருத்துவ நிபுணர்கள் தொடர்ந்து எச்சரித்த போதிலும் அரசாங்கம் ஏன் இந்த முடிவை இன்னும் எடுக்கவில்லை.
இன்று இடம்பெற்று வருகின்ற கொவிட் மரணங்களை ஸ்ரீலங்கா அரசாங்கம் மறைக்கின்றது. பேராசிரியர்கள் மற்றும் நிபுணர்கள்கூட நாட்டில் ஊரடங்குச் சட்டத்தை நடைமுறைப்படுத்தினால்தான் மரணங்களின் எண்ணிக்கையை 1200ஆக குறைத்துக்கொள்ளலாம் என்று தெரிவிக்கின்றனர்.
எனினும் ஸ்ரீலங்கா அரசாங்கம் இன்று அதனையும் கருத்திற்கொள்ளாமல் மக்களை பழிவாங்கும் செயற்பாட்டை மேற்கொண்டு வருகின்றது. ஸ்ரீலங்கா மக்கள் இன்று வீடுகளில் முடங்கியிருக்கின்றனர். நாடு முழுவதிலும் மரண அச்சம் மக்களைக் கிலிகொள்ள வைத்திருக்கிறது என தெரிவித்துள்ளார்.