மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யவே அரச உத்தியோகத்தர்கள்: வடக்கு ஆளுநர் சுட்டிக்காட்டு
மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யவே அரச உத்தியோகத்தர்கள் கடமையாற்றுகின்றனர் என வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் (P. S. M. Charles) தெரிவித்துள்ளார்.
பருத்தித்துறை தொண்டைமானாறு சித்த மத்திய மருந்தக திறப்பு விழாவில் இன்று (9) கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிகழ்வின் போது ஆளுநர் மேலும் உரையாற்றுகையில், “மக்களின் நீண்டகால தேவையாக காணப்பட்ட ஆயுர்வேத சித்த மருந்தகம் இன்று திறக்கப்பட்டுள்ளது.
வரலாற்று சிறப்பு பகுதி
இதனூடாக இந்த பகுதி மக்களுக்கான தேவைகள் பூர்த்தி செய்யப்படும் என நம்புகின்றேன். இந்த கட்டடத்தை நிர்மாணிக்க மக்களாக முன்வந்து தேவையான அடிப்படை வசதிகளை மேற்கொண்டுள்ளமை வடக்கு மாகாணத்திற்கே சிறந்த முன்னுதாரணமான செயற்பாடாகும்.
ஏற்கனவே இங்கு மூன்று துறைமுகங்கள் காணப்பட்டதாக அறியக் கிடைக்கின்றது. தற்போதுள்ள துறைமுகம் பிற்பட்ட காலத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்திலுள்ள சுங்க அலுவலகத்தை புனரமைக்க நாங்கள் கோரிக்கை விடுத்தோம். ஆகவே இதனூடாக மேற்கூறிய கருத்தை நானும் ஏற்றுக்கொள்கின்றேன். எனவே வரலாற்று சிறப்பு பகுதியில் வாழ்கின்றோம் என்பதில் மகிழ்ச்சி அளிக்கிறது.
வடக்கு மாகாண சுகாதாரத்துறை
இதேவேளை, இந்த மண்ணின் பெருமைக்குரிய குடும்பத்தினரின் உதவியோடு இந்த வைத்தியசாலை திறந்து வைக்கப்படுகின்றது. மக்கள் அரச உத்தியோகத்தர்களுடன் இணைந்து செயற்பட வேண்டும். மக்களுக்காகவே அரச சேவை முன்னெடுக்கப்படுகின்றது.
அதற்கமைய, மக்களிடமிருந்து விலகி நிற்க ஒருபோதும் நாங்கள் நினைத்ததில்லை. வைத்திய நிபுணர்களின் வெளியேற்றத்தால் வடக்கு மாகாண சுகாதாரத்துறை பாரிய சவாலுக்கு மத்தியில் செயற்பட்டு வருகின்றது. தாதியர் பயிற்சிகளுக்கு எமது பகுதிகளில் இருந்து ஒருவரும் செல்வதில்லை.
இந்தநிலையில், வைத்தியசாலைகளில் வெளி மாகாணங்களை சேர்ந்தவர்களே அதிகளவில் பணியாற்றுகின்றனர். அவர்களில் பலர் தமது கவலை நிலைகளை தெரிவித்து தினமும் என்னை சந்திக்க வருகின்றனர்.
உரிய தீர்வு
எனினும் மாகாணத்தின் அரச சேவையை உறுதிப்படுத்துவதற்காக அவர்களின் குரலுக்கு செவிசாய்க்காது திருப்பி அனுப்பிய சந்தர்ப்பங்களே அதிகம்.
வடக்கு மாகாணத்தில் 138 வைத்திய நிபுணர்களுக்கான வெற்றிடம் நிலவுகின்றது. இந்த வெற்றிடங்களை நிரப்புவதற்கு சுகாதார அமைச்சிடம் ஆளணி இல்லை. இவ்வாறான பல சவால்களுக்கு மத்தியிலேயே எமது சுகாதாரத்துறை இயங்குகின்றது.
மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்கே அரச உத்தியோகத்தர்கள் சேவையாற்றுகின்றனர். ஏதேனும் சேவைகள் உரிய முறையில் கிடைக்காவிடின் எங்களை சந்தித்து அவற்றிற்கான உரிய தீர்வுகளை பெற்றுக்கொள்ளுங்கள்.” என தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |