ராஜபக்சாக்கள் தொடர்பில் இலங்கை மக்களின் நிலைப்பாடு வெளியானது
ராஜபக்சாக்கள் அரசியலில் இருந்து விலகவேண்டும் என பத்தில் ஒன்பது இலங்கையர்கள் கருதுகின்றனர்.
மாற்றுக்கொள்கை நிலையத்தின் சோசியல் இன்டிகேட்டர் பிரிவு முன்னெடுத்த ஜனநாயக ஆட்சி மீதான நம்பிக்கைகள் குறித்த கருத்துக்கணிப்பிலேயே மக்கள் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்த கருத்துக்கணிப்புகள் மக்களின் எதிர்ப்பு காலிமுகத்திடல் ஆர்ப்பாட்டத்துடன் மட்டும் மட்டுப்படுத்தப்படவில்லை. பொருளாதார அரசியல் நெருக்கடி குறித்து நாடளாவிய ரீதியில் எதிர்ப்புணர்வு காணப்படுகின்றது என்ற செய்தியை அரசாங்கத்திற்கு தெரிவிக்கும் வகையில் காணப்படுகின்றது.
தற்போதைய நெருக்கடி காரணமாக நாட்டின் அனேக மக்கள் பாதிக்கப்பட்டுள்ளமை கருத்துக்கணிப்பின் மூலம் தெரியவந்துள்ளது. தாங்களோ அல்லது தங்கள் குடும்பத்தை சேர்ந்த யாராவது ஒருவரோ எரிபொருள், சமையல் எரிவாயு அத்தியாவசிய பொருட்களை பெறுவதற்காக கடந்த மாதம் வரிசையில் நின்றுள்ளதாக கருத்துக்கணிப்பில் கலந்துகொண்ட 88 வீதமானவர்கள் தெரிவித்துள்ளனர்.
தற்போதைய பொருளாதார நெருக்கடி காரணமாக தனது அல்லது நெருங்கிய குடும்ப உறுப்பினரின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது என கருத்துக்கணிப்பில் கலந்துகொண்டவர்களில் பத்தில் ஒன்பது பேர் தெரிவித்துள்ளனர்.
தற்போதைய நெருக்கடி ஜனநாயககுடியுரிமை பற்றிய விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளமையும் கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.
கருத்துக்கணிப்பில் கலந்துகொண்டவர்களில் அரைவாசிக்கும் அதிகமானவர்கள் ஆண்கள் – பெண்கள் நாட்டின் இந்த நிலைக்கு காரணமானவர்களிற்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டதாக தெரிவித்துள்ளனர்.
நாடாளாவிய ரீதியில் மக்கள் ஏகோபித்த குரலில் கோட்டாபய ராஜபக்ச அரசாங்கமே தற்போதைய நெருக்கடிக்கு ( சுதந்திரத்திற்கு பின்னர் மோசமான பொருளாதார நெருக்கடி என கருதப்படுகின்றது) காரணம் என குற்றம்சாட்டியுள்ளனர்.
62 வீதமானவர்கள் கோட்டாபய ராஜபக்ச அரசாங்கம் பொருளாதாரத்தை தவறாக கையாண்டமையே தற்போதைய நெருக்கடிக்கு காரணம் என கருதுகின்றமை கருத்துக்கணிப்பின் மூலம் புலனாகியுள்ளது. 14வீதமானவர்கள் சுதந்திரத்திற்கு பின்னர் நாட்டை ஆண்ட அனைத்து ஆட்சியாளர்களும் பொருளாதாரத்தை கையாண்டவிதமே தற்போதைய நெருக்கடிக்கு காரணம் என கருதுகின்றனர்.
அனைத்து அரசியல்வாதிகளினதும் சொத்துக்களையும் கணக்காய்விற்கு உட்படுத்தி கணக்கில் காட்டப்படாத சொத்துக்களை முடக்கவேண்டும் என 96 வீதமானவர்கள் கருதுகின்றனர்.
பிரதமர் பதவி விலகவேண்டும் என பத்தில் ஒன்பது பேர் கருதுவதுடன் ராஜபக்ச குடும்பம் அரசியலில் இருந்து விலகவேண்டும் எனவும் அவர்கள் கருதுகின்றனர்.
87 வீதமானவர்கள் கோட்டாபய ராஜபக்ச பதவி விலகவேண்டும் என கருதுகின்றனர்.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.