ரணிலால் தீரும் மக்களின் தாகம்: டக்ளஸ் தேவானந்தா
மக்கள் சரியான வழிமுறையில் அணிதிரளும் பட்சத்தில், நீர் தாகத்திற்கான தீர்வை வழங்குவதற்காக வந்திருக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) மூலம் மக்களின் அனைத்து தாகங்களுக்கும் தீர்வை பெற்றுக்கொள்ள முடியும் என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா (Douglas Devananda ) தெரிவித்துள்ளார்.
தாழையடி கடல் நீரை குடிநீராக மாற்றும் திட்டம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் இன்று(02.08.2024) சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்ட நிகழ்வில் உரையாற்றும் போதே கடற்றொழில் அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், "நீர் தாகத்தினை(குடிநீர் பிரச்சினை) போன்று எமது மக்கள் பல்வேறு தாகங்களோடு காணப்படுகின்றனர்.
மீட்சியின் எழுச்சி
அதாவது, அரசியல் சமவுரிமை பற்றிய தாகம், அபிவிருத்தி ஊடான அழகிய தேசத்தை கட்டியெழுப்பும் தாகம், அன்றாடப் பிரச்சினைகள் தொடர்பான தீர்விற்கான தாகம் போன்றவற்றுடன் எமது மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.
வீழ்ச்சியில் இருந்து மீட்சியின் எழுச்சி நோக்கி நாட்டு மக்களை வழிநடத்திவரும் வல்லமை கொண்ட ஜனாதிபதி, எமது மக்களின் தீர்க்கப்பட வேண்டிய தாகங்களுள் ஒன்றான குடிநீர் தாகத்தினை தீர்க்க ஆரம்பிக்கும் நோக்குடன் இன்று வருகை தந்துள்ளார்.
நியாயமான தீர்வு
எதிர்காலத்தில் மக்கள் எம்மோடு அணிதிரளும் பட்சத்தில் அனைத்து வகையான தாகங்களுக்கும் நியாயமான தீர்வுகளை பெற்றுக்கொள்ள முடியும்.
மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி என்பதை வலியுறுத்தி வருகின்ற நாம், எதிர்காலத்தில் தாகங்களை தீர்க்கும் வல்லமை கொண்ட ஜனாதிபதியுடன் இணைந்து செயற்படுவதுடன், மாநிலத்திலும் தேசிய நல்லிண அடிப்படையில் நடைமுறை சாத்தியமான வழிமுறையில் இணைந்து பயணிக்க முன்வருகின்ற தரப்புக்களுடன் புரிந்துணர்வுடன் செயற்பட்டு எமது மக்களின் தாகங்களை தீர்க்க தயாராக இருக்கின்றோம்" என்று கூறியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |