அதிபர் தேர்தல் குறித்து மக்கள் சிந்தித்து செயற்பட வேண்டும் : வஜிர அபேவர்த்தன சுட்டிக்காட்டு
அதிபர் தேர்தலில் இலங்கை மக்கள் தங்களுக்கு ஏற்பட்ட பேரழிவு மீண்டும் தங்களின் எதிர்கால பிள்ளைகள் அனுபவிக்காமல் இருப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுடன் அரசியலமைப்பின் பிரகாரம் அதிபர் தேர்தல் இடம்பெறும் என ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வஜிர அபேவர்த்தன தெரிவித்தார்.
ஐக்கிய தேசிய கட்சியின் காலி மாவட்ட கட்சி காரியாலயத்தில் நேற்று (28) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
ரணில் விக்ரமசிங்க நாட்டைப் பொறுப்பேற்றார்
''பல வருடங்களுக்குப் பின்னர் எமது நாட்டு கிறிஸ்தவ மக்கள் இந்த முறை நத்தார் தினத்தைக் கொண்டாட முடியுமாகி இருந்தது. கடந்த 3 வருடங்களாக பொருளாதார நெருக்கடி, உலகில் ஏற்பட்ட தொற்று நோய் நிலைமைகள் காரணமாக எமது நாட்டு மக்கள் மிகவும் அழுத்தத்துடனே இருந்தார்கள்.
சிங்கள, தமிழ், கிறிஸ்தவ மக்களுக்கு தங்களின் மத நிகழ்வுகளை அனுஷ்டிக்க முடியாத நிலை இருந்தது. இந்த அழுத்தம் இறுதியில் நாங்கள் வங்குராேத்து தேசமாக மாறினோம். அத்துடன் வங்குராேத்து அடைந்த இந்த நாட்டை பொறுப்பேற்க யாரும் இல்லாத சந்தர்ப்பத்திலேயே ரணில் விக்ரமசிங்க இந்த பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.
எப்படியாவது ஒருவருடமும் 6மாதங்கள் ஆகும்போது இந்த வங்குராேத்து நிலையில் இருந்து நாட்டை மீட்பதற்கு ரணில் விக்ரமசிங்கவுக்கு முடியுமாகியுள்ளது. இதன் காரணமாக எமது வியாபாரிகளின் கடன் நாணய கடிதம் உலக நாடுகள் ஏற்றுக்கொள்ளும் நாணய கடிதமாக மாறியுள்ளது.
அத்துடன் 2024 ஜனவரியாகும்போது எமக்கு உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி, ஜெக்கா நிறுவனம் உள்ளிட்ட எமக்கு நன்கொடை வழங்கிய மற்றும் கடன் வழங்கிய குழுவினர் நிறுத்தியிருந்த அபிருத்தி வேலைத்திட்டங்கள் மீண்டும் இலங்கைக்குள் ஆரம்பிக்க இருக்கின்றன.
உலக தலைவர்களின் கவனம்
இவ்வாறான நிலையில் அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு தற்போது பிரதான விடயமாக இருப்பது அதிபர் தேர்தலை எப்போது நடத்துவது என்பதாகும். அதேநேரம் அதிபர் தேர்தலில் வேட்பாளர்களாக களமிறங்கப்போவதாக பலரும் தெரிவித்திருக்கின்றனர். எவ்வாறு இருந்தாலும் இலங்கை மக்கள் இதுதொடர்பாக மிகவும் சிந்தித்து செயற்பட வேண்டி இருக்கிறது.
அத்துடன் அதிபர் தேர்தலுக்கு முன்வந்திருக்கும் வேட்பாளர்களுக்கு நாடொன்றை நிர்வகிக்க முடியுமா அல்லது இந்த வேட்பாளர்களுக்கு உலக தலைவர்களை சமாளித்துக்கொண்டு இலங்கையை முன்னுக்கு கொண்டுசெல்ல முடியுமா என்பதை மக்கள் நன்கு சிந்தித்து பார்க்க வேண்டும்.
ரணில் விக்ரமசிங்க கடந்த ஒருவருடம் 6 மாதங்களுக்குள் அமெரிக்க அதிபர், சீன அதிபர், இங்கிலாந்து, பிரான்ஸ், ஜப்பான் மற்றும் இந்திய பிரதமர் உள்ளிட்ட உலகில் பிரதான தலைவர்களின் கவனத்தை இலங்கையின்பால் செலுத்தியே இலங்கையை வங்குராேத்து நிலையில் இருந்து மீட்டு, முன்னோக்கி கொண்டுசெல்கிறார்.
உலகில் பல நாடுகள் வங்குராேத்து நிலையில் இருந்து இன்னும் மீள முடியாத நிலையில் இருக்கும்போது ரணில் விக்ரமசிங்க தனது அனுபவம் மற்றும் ஆளுமை காரணமாக எமது நாட்டை வங்குராேத்து நிலையில் இருந்து மீட்டிருக்கிறார்.
மீண்டும் வரிசை யுகம்
மேலும் அரசியலமைப்பின் பிரகாரம் அதிபர் ஒருவரை தெரிவு செய்துகொள்வதற்கான தேர்தல், பதவியில் இருக்கும் அதிபரின் பதவிக்காலம் முடிவடைவதற்கு ஒரு மாத காலத்துக்கு குறையாத மற்றும் இரண்டு மாதங்களைவிட அதிகரிக்காத கால வரையறைக்குள் இடம்பெற வேண்டும்.
அப்படியானால் தற்போது இருக்கும் அதிபர் போட்டியிடுவதாக இருந்தால், தான் போட்டியிடுவதாக தெரிவிக்க வேண்டும். அதன்போது அதிபர் தேர்தல் இடம்பெறும். அவ்வாறு இல்லாவிட்டால் தேர்தல் ஆணையாளரின் கடமையை செய்ய வேண்டி ஏற்படுகிறது.
அரசியல் கட்சிகள் தெரிவிக்கும் விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தி நாட்டு அதிபர் செயற்பட முடியாது. என்றாலும் நாங்கள் மீண்டும் எரிபொருள் வரிசைக்கு, எரிவாயு வரிசைக்கு செல்வதா நாட்டை வீழ்ச்சியடையச் செய்வதா அவ்வாறு இல்லாவிட்டால் தற்போது மேற்கொண்டிருக்கும் தேசிய கொள்கை கட்டமைப்பை அடுத்துவரும் 12 வருடங்களுக்காவது தொடர்ந்து மேற்கொள்ள தேவையான நடவடிக்கையை எடுக்கிறதா என்பதை நாட்டு மக்கள் தீர்மானிக்க வேண்டும்'' என தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |