அரசாங்கத்திற்கான மக்கள் ஆதரவில் கேள்விக்குறி - திஸ்ஸ விதாரண
தற்போதைய சூழ்நிலைமையில் தேர்தல் ஒன்று நடத்தப்படுமாயின் அரசாங்கத்திற்கு மக்கள் ஆதரவு வழங்குவார்களா என்பது சந்தேகத்திற்குரியது என லங்கா சமசமாஜ கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான பேராசிரியர் திஸ்ஸ விதாரண (Tissa Vitharana )தெரிவித்தார்.
சமகால அரசியல் நிலவரங்கள் குறித்து கருத்த வெளியிடுகையில் அவர் இவ்வாறு கூறியிருந்தார். மேலும் கருத்துரைத்துள்ள அவர்,
“அரசாங்கம் தொடர்பில் மக்கள் மத்தியில் மாறுபட்ட நிலைப்பாடு ஒன்று தோற்றம் பெற்றுள்ளது. இதனால், அரசியல் ரீதியிலான தீர்மானத்தை முன்னெடுக்க நாட்டு மக்கள் தயாராகவே உள்ளார்கள்.
நெருக்கடியான சூழ்நிலையினை அடிப்படையாகக் கொண்டு பொதுமக்கள் அரசியல் ரீதியிலான தீர்மானங்களை முன்னெடுக்க வாய்ப்புகளுண்டு.
கொவிட் தாக்கத்தின் பின்னரான காலப்பகுதியில் பொது மக்கள் குறிப்பாக நடுத்தர மக்கள் பொருளாதார ரீதியில் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
ஆனால், நடுத்தர மக்களின் நலன் குறித்து வரவு - செலவுத் திட்டத்தின் ஊடாக எவ்வித நலன்புரி திட்டங்களும் முன்னெடுக்கப்படவில்லை” என்றார்.
