யாழில் நன்றியுள்ள ஜீவனை கொடூரமாக கொன்ற இருவர் சிக்கினர்(இரண்டாம் இணைப்பு)
(இரண்டாம் இணைப்பு)
புங்குடுதீவில் நாய் ஒன்றை கைக்கோடரியினால் வெட்டி கொடூரமாகக் கொலை செய்து சமுக ஊடகங்களில் காணொளியை வெளியிட்ட கும்பலில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
எனினும் முதன்மை சந்தேக நபர் தலைமறைவாகியுள்ள நிலையில் தேடப்பட்டு வருவதாக ஊர்காவற்றுறை காவல்துறையினர் தெரிவித்தனர்.
புங்குடுதீவு 9ஆம் வட்டாரத்தில் இந்தச் சம்பவம் இரண்டு நாள்களுக்கு முன் இடம்பெற்றதாக விசாரணைகளில் தெரிவிக்கப்பட்டது.
யாழ்ப்பாணம் மாவட்ட பிரதி காவல்துறை மா அதிபர் பிரியந்த லியனகேயின் உத்தரவில் சம்பவம் தொடர்பில் ஊர்காவற்றுறை காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்தனர்.
புங்குடுதீவு 9ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த 21 மற்றும் 35 வயதுடைய இருவர் இன்று இரவு ஊர்காவற்றுறை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். நாயை வெட்டிக் கொல்லப் பயன்படுத்திய கைக்கோடாரி மற்றும் அதனை காணொளி எடுத்த அலைபேசி என்பனவும் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டது.
மிருக வதைச் சட்டத்தின் கீழ் சந்தேக நபர்களை ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தவுள்ளதாக காவல்துறையினர் கூறினர்.
யாழில் நன்றியுள்ள ஜீவனை கொடூரமாக கொன்றவர்களுக்கு வலைவீச்சு
யாழ்ப்பாணத்தில் நாய் ஒன்றினை மிக கொடூரமான முறையில் படுகொலை செய்து அதனை காணொளி எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்ட இளைஞர் குழுவை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
நான்கு இளைஞர்கள் நாய் ஒன்றின் நாலு கால்களையும் கைக்கோடாரி ஒன்றினால் துண்டித்து, நாயின் முகத்தினை மரக்கட்டை ஒன்றின் மீது வைத்து கைக்கோடாரியால் கொத்தி முகத்தை சிதைத்து படுகொலை செய்துள்ளனர்.
தமது கொடூரமான செயலினை காணொளியாக பதிவு செய்து அதனை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்தும் உள்ளனர்.
இந்த சம்பவங்கள் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.