அரசியல்வாதிகளின் பாதுகாப்பு குறித்து அமைச்சர் வெளியிட்ட தகவல்
இலங்கையின் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் அல்லது உள்ளூராட்சி சபை தலைவர்களுக்கு நிரந்தரப் பாதுகாப்பு வழங்குமளவுக்கு தற்போதைய பாதுகாப்பு நிலைமை, பாரதூரமானதாக இல்லை என பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால (Ananda Wijepala) தெரிவித்துள்ளார்.
வழக்கமான அடிப்படையில் அனைத்து அரசியல் பிரமுகர்களுக்கும் பாதுகாப்பு வழங்கவேண்டிய அளவுக்கு நிலைமை மோசமாக இல்லை எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன் நம்பகமான அச்சுறுத்தல்கள் இருக்குமானால், அரசாங்கம் தேவையான நடவடிக்கைகளை எடுக்கும் என அவர் உறுதியளித்துள்ளார்.
2 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு
அச்சுறுத்தல் உள்ளதாக உறுதிப்படுத்தப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஏற்கனவே பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் விதான ஆகியோருக்கு தற்காலிகப் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது என குறிப்பிட்டார்.
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வரும் அச்சுறுத்தல்கள் அவர்களின் பொதுப் பணிகளிலிருந்து வருகிறதா அல்லது தொடர்பில்லாத சட்டவிரோத நடவடிக்கைகளிலிருந்து வருகிறதா என்பது குறித்து தனக்கு நிச்சயமற்ற நிலை இருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |