இலங்கையில் ஊழி திரைப்படத்தை வெளியிட அனுமதி கிடைக்கவில்லை: ஊழி பட இயக்குனர்
இலங்கையில் ஊழி திரைப்படத்தை வெளியிட அனுமதி இன்னமும் கிடைக்கவில்லையென ஊழி திரைப்படத்தின் இயக்குனர் ரஞ்சித் ஜோசப் தெரிவித்துள்ளார்.
நாளை பத்தாம் திகதி உலக நாடுகளில் ஊழி திரைப்படம் வெளியாகவுள்ள நிலையில் இலங்கை திரைப்படக் கூட்டுத்தாபனம் தணிக்கை சான்றிதழை இதுவரை தராமையினால் இலங்கையில் இந்த திரைப்படத்தை வெளியிடுவது குறித்து தீர்மானிக்க முடியவில்லை என்றும் ரஞ்சித் ஜோசப் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் இது தொடர்பாக திரைப்படத்தின் இயக்குனர் ரஞ்சித் ஜோசப் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.
ஊழி திரைப்படம்
குறித்த அறிக்கையில் அவர் மேலும் தெரிவிக்கையில், “இலங்கையில் படமாக்கப்பட்டுள்ள ஊழி திரைப்படம் நாளை பத்தாம் திகதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ள நிலையில் இலங்கையில் இத்திரைப்படத்தின் வெளியீடு தொடர்பான நிலவரத்தை இவ் அறிக்கையின் வாயிலாக வெளிப்படுத்துகிறேன்.
எமது ஊழி திரைப்படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வேண்டி இலங்கை திரைப்படக் கூட்டுத்தாபனத்தின் தணிக்கை பிரிவிற்கு ஊழி திரைப்படம் சமர்ப்பிக்கப்பட்டது.
கடந்த ஆறாம் திகதி தணிக்கைக்காக திரைப்படத்தை பார்வையிட இருந்த போதும் எட்டாம் திகதியே தணிக்கை குழுவால் திரைப்படம் பார்வையிடப்பட்டது.
எனினும் 48 மணிநேரம் கடந்த நிலையிலும் இதுவரை தணிக்கை சான்றிதழ் குறித்த செய்தி எமக்கு கிடைக்கப்பெறவில்லை.
தணிக்கை சான்றிதழ்
ஊழி திரைப்படத்தை இலங்கையில் மக்கள் பார்வையிட மிகுந்த ஆர்வம் காட்டுகின்ற போதும் படத்தின் வெளியீடு தொடர்பாக எந்த அறிவிப்பையும் வழங்க முடியாத சூழலில் உள்ளோம்.
கருத்துச் சுதந்திரத்தை மதித்து, எமது கலைப்படைப்பினை இலங்கையில் வெளியிட அனுமதி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் காத்துள்ளோம்.
எனவே, நாளைய தினம், (10.05.2024) இலங்கை நேரப்படி 10.30 மணிக்கு இலங்கை வெளியீடு தொடர்பாக வெளிப்படுத்த உள்ளோம் என்பதையும் அறியத் தருகின்றேன்” என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் கிளிநொச்சி(Kilinochi) மாவட்ட செயலக திறன் விருத்தி மண்டபத்தில் தமிழ்த் தேசிய கலை இலக்கிய பேரவையின் ஏற்பாட்டில் நேற்றைய தினம்(08) ஊழி திரைப்பட பாடல்கள் வெளியிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |