43 மில்லியனுக்கும் அதிக பெறுமதியுடைய கேரள கஞ்சாவுடன் உடுத்துறையில் ஒருவர் கைது!
யாழ்ப்பாணம், உடுத்துறை கடற்பரப்பில் நேற்றிரவு (18) சிறிலங்கா கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது 130 கிலோக்கிராம் (ஈரமான எடை) கேரள கஞ்சாவைப் படகு ஒன்றில் ஏற்றிச் சென்ற சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இலங்கைக்கு சொந்தமான கடல் மற்றும் கரையோர வலயத்தில் சட்டவிரோத நடவடிக்கைகளை தடுக்கும் வகையில் கடற்படையினர் தொடர்ந்து கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
43 மில்லியன் ரூபாய்
இதன் போது குறித்த கடற்பகுதியில் சந்தேகத்திற்கிடமான வகையில் பயணித்த டிங்கி படகு ஒன்றைக் கண்காணித்து பரிசோதித்த போது, 61பைகளில் அடைக்கப்பட்ட மூன்று கேரள கஞ்சா பொதிகள் கைப்பற்றப்பட்டன.
கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சாவின் மொத்தப் பெறுமதி நாற்பத்து மூன்று (43) மில்லியன் ரூபாயுக்கும் அதிகம் என தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் யாழ்ப்பாணம், உடுத்துறை பகுதியைச் சேர்ந்த 44 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரும் கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சாவும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மருதங்கேணி காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.