காட்டு யானை தாக்கியதில் சம்பவ இடத்திலேயே நபர் ஒருவர் பலி
நபர் ஒருவர் பலி
மட்டக்களப்பு மாவட்டத்தின் ஆயித்தியமலை காவல் பிரிவிலுள்ள நெடியமடு கிராமத்தில் செவ்வாய்கிழமை இரவு (12) காட்டு யானை தாக்கியதில் நபர் ஒருவர் பலியாகியதாக ஆயித்தியமலை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
ஆயித்தியமலையில் வசித்து வரும் கோயில் போரதீவைச் சேர்ந்த(54 வயதுடைய) மு. விசயராசா என்பவரே பலியானவராவார்.
உன்னிச்சை மாரியம்மன் ஆலயத்திலிருந்து ஆயித்தியமலையில் உள்ள தனது வீட்டுக்கு செல்லும்போது நெடியமடு வைத்தியசாலைக்கு முன்னால் பிரதான வீதியில் நின்ற காட்டுயானை தாக்கியதில் சம்பவ இடத்திலே குறித்த நபர் பலியானதாக காவல்துறையினரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரிய வருகின்றது.
இச் சம்பவம் பற்றிய மேலதிக விசாரணைகளை ஆயித்தியமலை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
இப் பிரதேசத்தில் கடந்த சனிக்கிழமை (09ம் திகதி) காட்டு யானை தாக்கியதில் வயல் காவலில் இருந்த விவசாயி ஒருவர் பலியாகியதுடன் அதற்கு முன்னர் சில வாரங்களுக்கு முன் அடைச்சகல் பகுதி ஒருவரும் காட்டுயானை தாக்கி பலியாகியமை குறிப்பிடத்தக்கது.