யாழில் அதிகரித்த பாதிப்பு விபரம்! வெளியாகிய விசேட அறிக்கை
புதிய இணைப்பு
சீரற்ற காலநிலை காரணமாக யாழ்ப்பாண மாவட்டத்தில் 15,431 குடும்பங்களைச் சேர்ந்த 49,191 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்போது 3 உயிரிழப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன் இரண்டு நபர்கள் காயமடைந்துள்ளது.
அத்தோடு 2 வீடு முழுமையாகவும் 276 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளது. யாழ்ப்பாண மாவட்டத்தில் தற்போது 51 இடைத்தங்கல் முகாம் அமைக்கப்பட்டு 4547 நபர்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
மேலும், தற்போது பெய்து வரும் மழை வெள்ளம் காரணமாக கடந்த இருவர் எலிக்காய்ச்சல் காரணமாக உயிரிழந்துள்ளதாக யாழ்ப்பாணாம் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
செய்தி - தீபன்
கட்டைக்காடு,
இலங்கையில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையால் கடற்றொழிலாளர்களின் உபகரணங்கள், வாடிகள் என்பன பலத்த சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
யாழ். வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடு பகுதியில் கடற்றொழிலாளர்களுடைய உபகரணங்கள், சேதமடைந்துள்ளதுடன் வாடிக்களும் தூக்கி வீசப்பட்டுள்ளன.
கடற்பகுதிகளில் வீசிய கடுமையான காற்றால் பல கடற்றொழிலாளர்களுடைய வலைகள் மணலால் மூடப்பட்டுள்ளன. சிலருடைய மீன்பிடி உபகரணங்கள் கடலோடு அடித்துச் செல்லப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
செய்தி - எரிமலை
மருதலிங்கம் பிரதீபன்
அரசசார்பற்ற நிறுவனங்கள், சமூகமட்ட அமைப்புக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை வழங்க விரும்பினால், இன்று தொடக்கம் மாவட்ட செயலகத்தில் பொருட்களை கையேற்கும் கரும்பீடம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கு பொறுப்பாக பதவிநிலை உத்தியோகத்தர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்துள்ளார்.
இன்றையதினம் (01.12.2025) நடைபெற்ற அரச சார்பற்ற நிறுவனங்களுடனான கலந்துரையாடலிலேயே இதனை தெரிவித்துள்ளார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், அனர்த்த நிவாரணம் மேற்கொள்ள வழங்க முன்வருவோர் தாம் வழங்கவிருக்கும் பொருட்கள் தொடர்பான தகவல்கள் மற்றும் பொருட்கள் தொடர்பான விபரங்களையும் குறிப்பிட்டு குறித்த மாவட்ட செயலக கருமபீடத்தில் ஒப்படைக்கலாம் எனவும், உரிய பதிவுகளுடன் பொருட்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு கிடைப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.
செய்தி - கஜி
அரச மருத்து அதிகாரிகள் சங்கம்
மேலும், நாட்டில் ஏற்றபட்ட இயற்கை பேரனர்த்ததை தொடர்ந்து இலங்கை அரச மருத்து அதிகாரிகள் சங்கம் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று மருத்துவ சேவைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இது தொடர்பில் வடக்கு மாகாண அரச வைத்திய அதிகாரிகள் சங்க பிரதிநிதி கதிரமலை உமாசுதன் கருத்து தெரிவித்தார்.

இதேவேளை பாதிக்கப்பட்ட பல்வேறு பகுதிகளிலும் நேரடியாக சென்று சிகிச்சை மற்றும் சுகாதார மருத்து ஆலோசனைகளை வழங்கிவரும் மருத்து பணியாளர்களுக்கும் அவர் நன்றிதெரிவித்தார்.
செய்தி - எரிமலை
முதலாம் இணைப்பு
நிலவும் சீரற்ற காலநிலையால் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர்.
11 ஆயிரத்து 193 குடும்பங்களை சேர்ந்த 36 ஆயிரத்து 88 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி. என். சூரிய ராஜா தெரிவித்துள்ளார்.
வெள்ளத்தால் 5 ஆயிரத்து 243 பேர் இடம்பெயர்ந்துள்ளனர். இவர்கள் 51 இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
அனர்த்த உதவி
அனர்த்த நிவாரணம் மேற்கொள்ள அல்லது வழங்க முன்வருவோர் தாம் வழங்கவிருக்கும் பொருட்கள் தொடர்பில் முதற்கட்டத் தகவல்களை யாழ்ப்பாண மாவட்ட செயலகத்திற்கு அல்லது யாழ்ப்பாண மாவட்டச் செயலாளரிற்கு வழங்குமாறு மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு தலைவர் அறிவித்துள்ளார்.
தாம் வழங்க இருக்கும் பொருட்களை யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்திற்கு தந்துதவுங்கள். குறித்த உதவிகள் கொடையாளர்களின் பெயரினாலேயே அல்லது அவரது கைகளினாலேயே வழங்கப்படும்.
அதாவது ஒவ்வொரு கொடையாளர்களும் தனித்தனியே உதவிசெய்ய முற்படும்போது சிலரிற்கு உதவி பலமுறை கிடைக்கும் அதேசமயம் பலரிற்கு தேவையான உதவியே கிடைக்காமலிருக்கின்றன எனவும் கூறியுள்ளார்.
செய்தி - தீபன்
சீரற்ற காலநிலை
அத்துடன், சீரற்ற காலநிலையால் இருவர் காயமடைந்தனர். இரு வீடுகள் முழுமையாகவும் 256 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன என்றும் அவர் கூறியுள்ளார்.
இதேவேளை, சீரற்ற வானிலையால் யாழ்ப்பாணம், பொன்னாலை கடலில் கடற்றொழிலாளர் ஒருவர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொன்னாலை சிறு கடலில் கடற்றொழில் நடவடிக்கைக்காகச் சென்ற நிலையில் காணாமல்போன பொன்னாலையை சேர்ந்த 63 வயதான கடற்றொழிலாளர் ஒருவரின் சடலம் நேற்று மீட்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வட்டுக்கோட்டை காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.
மேலதிக செய்தி - கஜிந்தன்

யாழ் வடமராட்சி கிழக்கு பகுதியில் கடந்த நாட்களில் ஏற்பட்ட அனர்த்தம் காரணமாக வீடுகளில் இருந்து இடக்கால அனர்த்த முகாம்களில் 9 குடும்பங்கள் தங்க வைக்க பட்டுள்ளனர்.
இவர்களில் நாகர் கோவில் கிழக்கு பகுதியில் இருந்து 7குடும்பங்கள் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டு நாகர் கோவில் கிழக்கு கிராம உத்தியோகத்தர் அலுவலகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
மற்றும் ஆழியவளை பகுதியில் இரண்டு குடும்பங்கள் பாதிக்கப்பட்ட நிலையில் அவர்கள் ஆழியவளை கலைவாணி முன்பள்ளியில் பாதுகாப்பாக உள்ளனர்.
.தன்படி தங்க வைக்க பட்ட குடும்பங்களுக்கான உணவு வசதிகளை வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகம் ஏற்பாடு செய்து வழங்கி வருகின்றதோடு அவர்களுக்கான மருத்துவ பொருட்கள் உதவியினை தன்னார்வளர்களின் நிதி அனுசரணையில் வடமராட்சி கிழக்கு இளைஞர்களின் ஏற்பாட்டில் அனர்த்த இடக்கால முகாம்களில் தங்க வைக்கப்பட்ட குடும்பங்களுக்கு இன்றைய தினம் காலை வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
செய்தி - எரிமலை
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |