சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவுக்கு எதிராக லஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு!
சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள ஊழல் மற்றும் மோசடிக் குற்றச்சாட்டுகள் குறித்து முறைப்படியான விசாரணையை நடத்துமாறு கோரி முறைப்பாடு ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது.
பிவிதுரு ஹெல உறுமய கட்சி இன்று (30)-07-2026) லஞ்ச அல்லது ஊழல் பற்றிய புலனாய்வு ஆணைக்குழுவில் (CIABOC) இந்த முறைப்பாட்டை முன்வைத்துள்ளது.
அக்கட்சியின் பொதுச்செயலாளர் உபுல் கமகேவினால் சமர்ப்பிக்கப்பட்ட இம்முறைப்பாட்டுடன் சபாநாயகரின் ஊழல் செயற்பாடுகளுக்குச் சான்றாக 10 எழுத்துப்பூர்வ ஆவணச் சான்றுகளும் ஆணைக்குழுவிடம் கையளிக்கப்பட்டன.
எரிபொருள் ஒதுக்கீடு
சபாநாயகருக்கு எதிராகச் சமர்ப்பிக்கப்பட்டுள்ள சான்றுகளில் பின்வரும் முக்கிய குற்றச்சாட்டுகளாக, “சபாநாயகருக்கு உரித்தான உத்தியோகபூர்வ இல்லத்திற்கு மேலதிகமாக பிறிதொரு வீட்டையும் பயன்படுத்தியமை.

உத்தியோகபூர்வ இல்லத்தில் இருந்த தளபாடங்கள் மற்றும் சாதனங்களைத் தனது தனிப்பட்ட வீட்டிற்கு எடுத்துச் சென்றமை மற்றும் அங்குத் தனிப்பட்ட ஊழியர்களைத் தங்க வைத்திருந்தமை.
நாடாளுமன்ற உறுப்பினர் என்ற ரீதியில் தனக்கு உரித்தான எரிபொருள் ஒதுக்கீட்டிற்கும் (Fuel Quota) அதிகமாக மேலதிக எரிபொருளைப் பெற்றுக்கொண்டமை” என்பன சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பல மாதங்கள்
இக்குற்றச்சாட்டுகள் தொடர்பாகப் பல மாதங்களுக்கு முன்னர் நாடாளுமன்றப் பணியாளர் பிரதானி சாமிந்த குலரத்ன கருத்து வெளியிட்டிருந்த போதிலும், அது குறித்து இதுவரை எவ்வித முறைப்படியான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனப் பிவிதுரு ஹெல உறுமய சுட்டிக்காட்டியுள்ளது.
முறைப்பாட்டைப் பதிவு செய்த பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த பொதுச்செயலாளர் உபுல் கமகே, “லஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் ரங்க திஸாநாயக்க, இதுவொரு சுயாதீனமான நிறுவனம் என அடிக்கடி கூறி வருகிறார்.

நாட்டின் மூன்றாவது பிரஜையான சபாநாயகருக்கு எதிராக நாங்கள் சமர்ப்பித்துள்ள இந்தச் சான்றுகளின் அடிப்படையில் ஆணைக்குழு எவ்வாறு செயற்படுகிறது என்பதைப் பொறுத்தே அதன் சுயாதீனத்தை முழு நாடும் கண்டுகொள்ள முடியும்.
இது அரசாங்கத்திற்கு எதிரான போராட்டமல்ல மாறாக ஊழலுக்கு எதிராக எமது கட்சி எடுக்கும் பொறுப்புள்ள நடவடிக்கையாகும்” என தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |