பன்றியின் சிறுநீரகம் மனித உடலில் 271 நாட்கள் செயற்பட்டு சாதனை
பன்றியிடமிருந்து பெறப்பட்ட சிறுநீரகத்தைப் பொருத்திய அமெரிக்க நோயாளி ஒருவரின் உடலில், அந்தச் சிறுநீரகம் 271 நாட்கள் செயற்பட்டு சாதனை படைத்துள்ளதாக அமெரிக்க மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இது பன்றியின் உறுப்பொன்று மனித உடலில் வெற்றிகரமாகச் செயற்பட்ட மிக நீண்ட காலமாகும் என மருத்துவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
நீண்டகாலமாக இரத்தச் சுத்திகரிப்பு சிகிச்சையான டயாலிசிஸ் மூலம் வாழ்ந்து வந்த குறித்த நோயாளிக்கு, மனித சிறுநீரகம் கிடைக்கும் வரையிலான தற்காலிக மாற்று ஏற்பாடாக பன்றியின் சிறுநீரகம் பொருத்தப்பட்டது.
271 நாட்கள் சாதனை
இந்த உறுப்பு மாற்று சிகிச்சை தனக்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியதாக நோயாளி தெரிவித்துள்ளார்.

எனினும், இறுதியில் பன்றியின் சிறுநீரகத்தின் செயற்பாடு தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, குறித்த நோயாளிக்கு மனித சிறுநீரகம் மாற்றுப் பொருத்து சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் ஆண்டுதோறும் சுமார் 25,000 சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சைகள் இடம்பெறுகின்றன.
அதேவேளை, சுமார் ஒரு இலட்சம் பேர் சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சைக்காகக் காத்திருப்போர் பட்டியலில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மனித உறுப்புகளுக்கான பற்றாக்குறையை சமாளிப்பதற்கான மாற்று வழியாக, விலங்குகளின் உறுப்புகளை மனிதர்களுக்குப் பொருத்தும் Xenotransplantation துறையில் இந்தச் சாதனை முக்கிய முன்னேற்றமாகக் கருதப்படுகிறது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |