செம்மணி மனிதப்புதைகுழி விவகாரம் தொடர்பில் கனடா நாடாளுமன்றில் ஒலித்த குரல்
செம்மணி மனிதப்புதைகுழி விவகாரத்தைப் பொறுத்தமட்டில், சுயாதீன நெறிமுறைகளுடன்கூடிய சர்வதேச கண்காணிப்பு வேண்டும் என்ற தமிழர்களின் கோரிக்கையை கனடா ஆதரிக்கவேண்டும் என அரசியல் ஆய்வாளர் மற்றும் மனித உரிமைச் செயற்பாட்டாளர் மரியோ அருள்தாஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.
பெருமளவில் மனிதப்புதைகுழிகள் கண்டறியப்பட்ட இடங்களில் பணியாற்றிய சொந்த அனுபவத்தைப் பயன்படுத்தி, இதற்கான சர்வதேசக் கூட்டமைப்பொன்றை கனடாவினால் உருவாக்கமுடியும் எனவும் அவர் கூறியுள்ளார்.
கனேடிய நாடாளுமன்ற வளாகத்தில் செம்மணி மனிதப்புதைகுழி தொடர்பில் பொறுப்புக்கூறலை வலியுறுத்தி கடந்த வாரம் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றியபோதே அவர் மேற்கண்டவாறு சுட்டிக்காட்டினார்.
இலங்கை இராணுவம்
மேலும், ''செம்மணி நிலப்பரப்பு எமக்கு எந்தவகையில் முக்கியமானது என்பதைப் புரிந்துகொள்வதற்கு நாம் 30 ஆண்டுகள் பின்நோக்கிச் சென்று, அப்படுகொலைகளுடன் தொடர்புடையவர்களின் கதைகளை அறியவேண்டும்.

1995 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் இலங்கை இராணுவம் யாழ்ப்பாணத்தை அதன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தது. அங்கு அவர்கள் முகாம்கள், சோதனைச்சாவடிகள் மற்றும் படைத்தளங்கள் உள்ளிட்ட ஒரு நெருக்கமான வலைப்பின்னலை உருவாக்கினர்.
இதனூடாக யாழ்ப்பாணத்தை உலகிலேயே அதிகளவில் இராணுவமயமாக்கப்பட்ட பகுதிகளில் ஒன்றாக மாற்றினர்.
இவை விடுதலைப்புலிகளின் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தும் நோக்கம் கொண்டவை என்று கூறப்பட்டாலும், உண்மையில் அங்கு நடைபெற்ற நிகழ்வுகள் தமிழர்களின் மனங்களில் ஆறாத வடுக்களை ஏற்படுத்தியுள்ளன என்பதை எவராலும் மறைக்க முடியாது.
இவ்வாறானதொரு பின்னணியில் செம்மணி நிலம் என்பது இனப்படுகொலையின் ஒரு குறியீடாகவும், அரச வன்முறையின் இன்னமும் தீர்வு காணப்படாத களமாகவும் திகழ்கிறது.
தொடரும் தண்டனையற்ற போக்கு
இலங்கையில் இன்னமும் தொடரும் தண்டனையற்ற போக்குக்கு இதுவொரு சான்றாகும். மனிதப்புதைகுழிகள் என்பன போரின் தற்செயலான எச்சங்கள் அல்ல. மாறாக அவை அரசின் திட்டமிட்ட நோக்கத்தின் வெளிப்பாடுகளாகும்.

மனித உயிர்களை அழித்து, உண்மையை மண்ணுக்கு அடியில் புதைப்பதற்கான பௌதிக ரீதியான ஒரு முயற்சியையே இவை குறிக்கின்றன. 1996இல் கிருஷாந்தி குமாரசுவாமியும் அவரது குடும்பத்தினரும் கொல்லப்பட்ட அதே ஆண்டில், யாழ்ப்பாணத்தில் நூற்றுக்கணக்கானோர் காணாமல்போயினர்.
அந்த ஆண்டில் மாத்திரம் யாழ்ப்பாணத்தில் காணாமல் போனவர்களின் எண்ணிக்கை 700 க்கும் அதிகம் என்று கருதப்படுகிறது.
ஒப்பீட்டளவில் சிறிய பரப்பளவு கொண்ட ஒரு பகுதியில் இத்தனை உயர் எண்ணிக்கையிலான மக்கள் காணாமல்போனமை மிகுந்த அதிர்ச்சியளிக்கும் நிகழ்வாகும்" என மேலும் கூறியுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |