கிழக்கில் எனது அரசியல் பயணத்தை முடக்க சுமந்திரன் சதி - பிள்ளையான் குற்றச்சாட்டு
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் சபையில் கருத்துக்களை முன்வைத்துள்ளதாகவும் இனிமேல் அவர் தமக்கு சம்பந்தமில்லாத விடயங்களை சிறப்புரிமையாக சபையில் முன் வைக்க இடமளிக்கக் கூடாதென்றும் இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் சபாநாயகரை கேட்டுக் கொண்டார்.
நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் சிறப்புரிமை பிரச்சினையொன்றை எழுப்பி உரையாற்றிய இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன், தான் கிழக்கில் முன்னெடுக்கும் அரசியல் பயணத்தை முடக்கும் முயற்சிகளில் சுமந்திரன் ஈடுபட்டுள்ளதாகவும் சபையில் குறிப்பிட்டார்.
அது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
மகிந்த -பிள்ளையான் முரண்பாடு

சுமந்திரன் எம்பி தமக்கும் முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையில் பிளவுகளை ஏற்படுத்தும் வகையில் கருத்துக்களை முன்வைத்துள்ளார்.
அதே வேளை 600 காவல்துறையினர் கொல்லப்பட்ட சம்பவத்துக்கும் எனக்கும் தொடர்புள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கிழக்கில் எனது அரசியல் பயணத்தை முடக்க திட்டம்

நான் குற்றவாளியல்ல என்பதை நிரூபித்து நீதிமன்றம் என்னை விடுதலை செய்துள்ள போதும் அவர் கிழக்கில் நான் முன்னெடுக்கும் அரசியல் பயணத்தை முடக்கும் வகையிலேயே இவ்வாறு கருத்துக்களை முன்வைத்து வருகின்றார். அதற்கு இடமளிக்கக்கூடாது என்றும் அவர் சபையில் கேட்டுக் கொண்டார்.