உயிர் தியாகம் செய்த விமானி..! பாலத்தில் இறக்கினால் ஹெலிகொப்டர் வெடித்திருக்கும்: விமானப்படை
லுணுவில பாலத்திற்கு அருகில் விமான படைக்கு சொந்தமான ஹெலிகொப்டரை அவசரமாக தரையிறக்கம் செய்திருந்தால், தீப்பிடித்து வெடித்திருக்கலாம் என்று விமானப்படை செய்தித் தொடர்பாளர் குரூப் கேப்டன் எரந்த கீகனகே தெரிவித்துள்ளார்.
அத்துடன் அந்த சந்தர்ப்பத்தில் லுணுவில பாலத்திற்கு அருகில் இருந்தவர்களை குறை கூற முடியாது என்றும் விமானப்படை செய்தித் தொடர்பாளர் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு வழங்குவதற்காக விநியோக நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த ஹெலிகொப்டர், (30.11.2025) பிற்பகல் லுணுவில பாலத்திற்கு அருகில் விபத்துக்குள்ளானது.
சாலையில் தரையிறங்க முயற்சிக்கவில்லை
சம்பவம் குறித்து இலங்கை விமானப்படை உள்ளக விசாரணைகளை நடத்தி வருகிறது.

ஹெலிகொப்டரை வீதியில் தரையிறங்க முயற்சிக்கவில்லை என்றும் உணவுப் பொருட்கள் ஏற்றப்பட்ட பிறகு மேல் கிளம்புவதற்கு சிரமம் ஏற்பட்டதாகவும்'அவர் குறிப்பிட்டுள்ளார்.
வேறு வழியிருக்கவில்லை
ஹெலிகொப்டரை மேல்நோக்கி பறக்க விட முடியாமல் விமானியின் கட்டுப்பாட்டை இழந்திருக்கலாம், அத்தகைய சூழ்நிலையில், ஜின் கங்கையின் நீரில் ஹெலிகொப்டரை தரையிறக்குவதைத் தவிர வேறு வழியில்லை என்றும் விமானப்படை செய்தித் தொடர்பாளர் விளக்கினார்.

ஆபத்து இருந்த போதிலும், இது உடன் எடுக்கப்பட்ட செயற்பாடாகும், வேறு வழியிருக்கவில்லை என எரந்த கீகனகே தெரிவித்துள்ளார்.
மேலும் சேதமடைந்த பெல் 212 ஹெலிகொப்டரை 24 மணி நேரத்திற்குள் ஆற்றில் இருந்து வெளியே எடுக்க உள்ளூர்வாசிகள் வழங்கிய உதவியை விமானப்படை செய்தித் தொடர்பாளர் பாராட்டியுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |