பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு சொந்த காணிகள் வழங்க நடவடிக்கை : ரணில் அறிவிப்பு
மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களின் லயன் முறைமையினை புதிய கிராமங்களாக மாற்றி சொந்தமாக காணிகள் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) தெரிவித்துள்ளார்.
இன்று (31.08.2024) பண்டாரவளை (Bandarawela) நகரில் ஏற்பாடு செய்யப்பட்ட மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே ரணில் விக்ரமசிங்க இவ்வாறு குறிப்பிட்டார்.
இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர், “அநேகமானோர் சம்பளம் அதிகரிக்கப்படவில்லையென கூறினார்கள். சம்பளம் அதிகரிக்கப்படாவிட்டால் சட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்தி சம்பளத்தை அதிகரிப்பேன் என கூறினேன் அன்று சொன்னதைப்போல் சம்பளத்தை அதிகரித்தேன்.
பொருளாதாரத்தை அதிகரித்தல்
அஷ்வெசும கொடுப்பனவு கிடைக்காதவர்களுக்கு அஷ்வெசுமவினை வழங்குவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துக் கொண்டிருக்கின்றோம்.
இளைஞர் யுவதிகளுக்கு தொழில் தேவைப்படுகிறது. பொருளாதாரத்தை அதிகரித்து கொண்டு போகின்றமையால் எதிர்வரும் காலங்களில் ஒரு இலட்சம் வேலைவாய்ப்பினை வழங்க தயாராக இருக்கின்றோம்.
அரச வேலைவாய்ப்பு, தனியார் வேலைவாய்பு, பயிற்சிகளை வழங்கி நிரந்தரமாக்குதல் மற்றும் நவீன முறையில் இளைஞர் யுவதிகளுக்கு விவசாயத்துறையில் சிறந்த இலாபத்தினை பெற்றுக்கொள்ளும் வாய்ப்பினை ஏற்படுத்துவோம்.
நிதியுதவிகளையும் வழங்குதல்
தனியார் நிறுவனத்தில் பயிற்சியினைப் பெற்றுக்கொண்டு தொழிலை பெற்றுக்கொள்ள நிதியுதவிகளையும் வழங்குவோம் என சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.
ஆனால் ஜே.வி.பி. தொழில் வங்கியை இல்லாமலாக்கி நாட்டில் உள்ள தொழில் பற்றி விளக்கமளிக்கின்றார்கள். தொழில் வங்கி தொழில் இல்லாமையினால் வங்குரோத்து வங்கியாக மாறிவிட்டது. சஜித் பிரேமேதாச (Sajith Premadasa) தொழில் குறித்து ஒரு வார்த்தை கூட பேசுவதில்லை. இவர்களுக்கா வாக்களிக்க போகின்றீர்கள்.
இந்த பிரதேசத்தை அபிவிருத்தி செய்வதன் ஊடாக 25 இலட்சம் முதல் 50 இலட்சம் வரை வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை அதிகரிக்க முடியும். இரண்டு வருடங்கள் செல்லும் போது சுற்றுலா பயணிகள் செல்ல வீதிகள் பற்றாக்குறையாக காணப்படும்“ என தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |