சீனாவிடம் பிரதமர் மஹிந்த விடுத்துள்ள கோரிக்கை
சர்வதேச முதலீடுகளைக் கவர்ந்திழுப்பதற்கு சீனாவின் முழு ஆதரவு இலங்கைக்கு தேவைப்படுவதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட சீனப் பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் வெய் பங் உள்ளிட்ட குழுவினர் நேற்றையதினம் பிரதமர் மஹிந்த ராஜபக்சவை அலரிமாளிகையில் வைத்து சந்தித்தனர்.
இந்த இருதரப்பு கலந்துரையாடலில் கருத்து வெளியிட்ட பிரதமர் மஹிந்த ராஜபக்ச,
கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் இலங்கைக்கு தூதுக்குழுவினர் விஜயம் மேற்கொண்டிருப்பதையிட்டு நன்றி தெரிவிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
தொற்று நிலைமைக்கு மத்தியில் சீனாவின் உயர்மட்ட தூதுக்குழுவினர் பல சந்தர்ப்பங்களில் இலங்கைக்கு விஜயம் செய்ததை நினைவுகூர்ந்த பிரதமர், சீனப் பாதுாப்பு அமைச்சரின் இவ்விஜயம் மற்றும் சந்திப்பின் ஊடாக பலமான மற்றும் நட்பு ரீதியிலான இருதரப்பு உறவை மேலும் வலுப்படுத்துவதற்கு வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்ப்பதாகவும் கூறியுள்ளார்.
கொவிட் தொற்றுநோய் பரவல் ஆரம்பித்ததிலிருந்து சகல இலங்கை பிரஜைகளுக்காகவும் சீனா 600,000 சினோஃபார்ம் தடுப்பூசிகள் மற்றும் சுகாதார பாதுகாப்பு உபகரணங்கள் ஆகியவற்றை தாராளமாக நன்கொடையாக வழங்கிமையை பாராட்டுவதாக மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இந்த தொற்றுநோயைக் கையாள்வதில் சீன அரசாங்கத்தின் தொடர்ச்சியான ஆதரவை எதிர்பார்ப்பதாகவும், உலகளாவிய ரீதியிலிருந்து இலங்கைக்கு முதலீடுகளை ஈர்ப்பதே தற்போதைய எமது முன்னுரிமையாகவுள்ளது எனவும்,
அவ்வாறான முதலீட்டாளர்களின் இலங்கை மீதான நம்பிக்கையை கட்டியெழுப்புவதற்கு சீனாவின் ஆதரவை எதிர்பார்ப்பதாகவும் பிரதமர் மஹந்த ராஜபக்ச இந்தச் சந்திப்பின்போது சுட்டிக்காட்டியுள்ளார்.