தாளையடி கடல் நீர் சுத்திகரிப்பு திட்டம்: ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்த வட மாகாண ஆளுநர்
வடமாகாணத்தில் பாரிய குடிநீர் திட்டத்தை வெற்றியடையச் செய்வதற்கு உதவிய ஜனாதிபதிக்கு நாம் நன்றி கூற வேண்டு என வட மாகாண ஆளுநர் பி. எஸ். எம். சார்லஸ் (P.S.M. Charles) தெரிவித்துள்ளார்.
தாளையடி கடல் நீர் சுத்திகரிப்பு நிலையத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் இன்று (02) கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், ”2015 ஆம் ஆண்டில், அவர் பிரதமராக இருந்த காலத்தில், முழுத் திட்டத்தையும் சீரமைத்து, அதற்குத் தேவையான மேலதிக நிதி வசதிகளைப் பெற்றுக்கொள்ள வழி செய்தார்.
செயல்பாட்டு திட்டம்
2017 ஆம் ஆண்டில், ஆசிய அபிவிருத்தி வங்கியுடன் (ADB) கூடுதல் நிதியுதவி வழங்குவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதன் மூலம் திட்டம் மேலும் வலுவடைந்தது.
இந்த ஒப்பந்தம் கடல் நீரில் உப்புநீக்கும் நிலையத்தின் செயல்பாட்டை எளிதாக்கிய அதேவேளை, அதன் நிர்மாணம் மற்றும் ஐந்தாண்டு செயல்பாட்டு திட்டம் உட்பட திட்டத்தின் கூடுதல் செலவுகளை ஈடுகட்டவும் உதவியது.
ஜனாதிபதியின் அர்ப்பணிப்பின் பலனாக யாழ்ப்பாணம் (Jaffna) மற்றும் கிளிநொச்சி (Kilinochchi) மாவட்டங்களில் வாழும் சுமார் 3 இலட்சம் மக்களின் நீண்டகாலத் தேவையாக இருந்த பாதுகாப்பான குடிநீர் வசதி இன்று கிடைத்துள்ளது.
சுகாதார வசதிகள்
மேலும், யாழ்ப்பாண நகரில் வாழும் 80,000 மக்களின் சுகாதார வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளதுடன், வடமாகாண விவசாயத் துறையும் குறிப்பிடத்தக்க நன்மைகளைப் பெற்றுள்ளது.'' என குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இராஜாங்க அமைச்சர்களான கலாநிதி சுரேன் ராகவன், காதர் மஸ்தான், நாடாளுமன்ற உறுப்பினர்களான தர்மலிங்கம் சித்தார்ன், அங்கஜன் இராமநாதன் (Angajam Ramanathan), தேசிய பாதுகாப்பு தொடர்பிலான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க (Sagala Rathnayake), முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க (Ravi Karunanayake), முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் (Vijayakala Maheshwaran) உள்ளிட்ட பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |