'பிஎன்எஸ் ஷாஜஹான்' போர்க்கப்பல் சிறிலங்காவுக்கு விரைவு
பாகிஸ்தான் கடற்படையின் 'பிஎன்எஸ் ஷாஜஹான்' என்ற கப்பல் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
இந்தக் கப்பல் சிறிலங்கா கடற்படை கப்பலுடன் கடற்படை பயிற்சியில் ஈடுபட திட்டமிடப்பட்டுள்ளது.
பிஎன்எஸ் ஷாஜஹான்
பாகிஸ்தான் கடற்படைக்குச் சொந்தமான 'பிஎன்எஸ் ஷாஜஹான்' என்ற கப்பல் இன்று கொழும்பு துறைமுகத்தை சென்றடைந்த நிலையில், கடற்படையின் பாரம்பரிய முறைப்படி சிறிலங்கா கடற்படையினர் கப்பலை வரவேற்றனர்.
134.1 மீற்றர் நீளமும், 169 பணியாளர்களையும் கொண்ட 'பிஎன்எஸ் ஷாஜஹான்' போர்க்கப்பல் ரக கப்பல் அதன் தலைவர் அட்னான் லகாரி டி (ADNAN LAGHARI TI) தலைமையில் வழிநடத்தப்படுவதாக சிறிலங்கா கடற்படை தெரிவித்துள்ளது.
உத்தியோகபூர்வ சந்திப்பு
இந்தக் கப்பலின் கட்டளைத் தளபதி மற்றும் மேற்கு கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் சுரேஷ் டி சில்வா ஆகியோருக்கு இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு இன்று மேற்கு கடற்படை கட்டளைத் தலைமையகத்தில் நடைபெற்றது.
மேலும், 'பிஎன்எஸ் ஷாஜஹான்' கப்பல் இலங்கையில் தங்கியிருக்கும் போது, இரு நாட்டு கடற்படைகளுக்கு இடையேயான நட்புறவை மேம்படுத்தும் வகையில் சிறிலங்கா கடற்படை ஏற்பாடு செய்துள்ள நிகழ்ச்சிகளில் அதன் முழு கடற்படையினரும் பங்கேற்கவும், பல பகுதிகளை பார்வையிடவும் திட்டமிடப்பட்டுள்ளது.
கடற்படை பயிற்சி
இதனையடுத்து எதிர்வரும் 04 ஆம் திகதி மேற்கு கடற்படை கட்டளைக்கு சொந்தமான கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படை கப்பலுடன் கடற்படை பயிற்சியில் ஈடுபட திட்டமிடப்பட்டுள்ளதுடன் அன்றைய தினமே கப்பல் நாட்டை விட்டு புறப்படவுள்ளது.
