அமெரிக்க தூதரகத்தின் எச்சரிக்கை: பதில் காவல்துறை மா அதிபரின் விசேட அறிக்கை
புதிய இணைப்பு
அருகம்பேயின் பாதுகாப்பு தொடர்பில் பதில் காவல்துறை மா அதிபர் பிரியந்த வீரசூரிய விசேட அறிக்கையொன்றை விடுத்துள்ளார்.
அதன்போது, இந்த நாட்டிலுள்ள அனைத்து வெளிநாட்டினரின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும், அது தொடர்பில் அனைத்து தூதரகங்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
முதலாம் இணைப்பு
அறுகம்பே சுற்றுலாப் பிரதேசத்தில் பாதுகாப்பை பலப்படுத்துவதற்காக சுமார் 500 காவல்துறை அதிகாரிகள் மற்றும் விசேட அதிரடிப்படை அதிகாரிகளை அனுப்பியுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் பிரதி காவல்துறைமா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
அறுகம்பே மற்றும் பொத்துவில் பிரதேசங்களில் இஸ்ரேலிய சுற்றுலா பயணிகளை இலக்கு வைத்து அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக கிடைக்க பெற்ற இரகசிய தகவலுக்கமைக்கமையவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு
இதன்போது, குறித்த பிரதேசத்தில் இஸ்ரேலிய சுற்றுலா பயணிகள் அதிகமாக அலைச்சறுக்கு (Surfing)நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் நிலையில், அவர்களுக்கு ஆபத்து நேரிடலாம் என தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது.
இந்நிலையில், அந்த பிரதேசத்தில் பாதுகாப்பை பலப்படுத்துவது தொடர்பில் புலனாய்வுப் பிரிவினரும் ஏனைய பாதுகாப்பு நிறுவனங்களும் அவதானம் செலுத்தி வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
மேலும், கொழும்பில் அல்லது நாட்டின் வேறு எந்தப் பகுதியிலும் இதுவரையில் இவ்வாறான அச்சுறுத்தல்கள் தொடர்பில் புலனாய்வு அறிக்கைகள் எதுவும் கிடைக்கப்பெறவில்லை எனவும், பொதுமக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |